Show all

சேலத்தில் துண்டறிக்கைகள் விநியோகித்த இதழியல் மாணவி கைது

நடுவண் அரசின் மீதேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக சேலம் அரசு மகளிர் கல்லூரி அருகே துண்டறிக்கைகள் விநியோகித்த கல்லூரி மாணவி உள்ளிட்ட இரு பெண்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

     சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே

‘இயற்கை பாதுகாப்புக் குழு’வின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி அகவை 25, மற்றும் ஜெயந்தி அகவை 48 ஆகிய இரு பெண்கள், நடுவண் அரசின் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டறிக்கைகளைப் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

     அதில் ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக வரும் 15 அன்று புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை நிற்போம். நடுவண், மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல் துறையை வெளியேற்று. ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்’

என்பன உள்ளிட்ட கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

     கன்னங்குறிச்சி காவல்துறையிர் கைது செய்த இருவரையும் அம்மாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

     வளர்மதி செய்தியாளர்களிடம் கூறும் போது,

“இயற்கை பாதுகாப்புக் குழு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். இயற்கை வேளாண்மைக்காக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறேன். இயற்கையை, வேளாண்மையைப் பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்ததால் கைது செய்துள்ளனர்”

என்றார்.

     வளர்மதி சேலம் வீராணத்தை அடுத்து வீமனூர் பகுதியைச் சேர்ந்த மாதையன் என்பவரின் மகள். வேளாண்மை பட்டதாரியான இவர், தற்போது சேலத்தில் இதழியல் படித்து வருகிறார்.

     ஜெயந்தி சேலம் பொன்னம்மாபேட்டை தில்லைநகரைச் சேர்ந்த தர்மேந்திர குமார் என்பவரின் மனைவி ஆவார்.

     அரசுக்கு எதிராக கலகத்தை தூண்டும் செயலில் ஈடுபட்ட தான குற்றச்சாட்டில், ஐபிசி 153, 505 (1பி) 71(ஏ) சிஎல்ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.