இந்திய விடுதலையை அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியைத் தொடங்கியவர் பாவேந்தர்பாரதிதாசன் அவர்கள். 20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலையை அடுத்து, மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் இப்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் தொடங்கின. இந்த முயற்சியைத் தொடங்கியவர் பாவேந்தர்பாரதிதாசன் அவர்கள்தாம். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்கத் திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார் என்பதாக அறிய முடிகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி, இந்தப் படம் வரையப்பட்டது குறித்து, “திருக்குறள் திருவுருவப் பட விளக்கம்” என்ற ஒரு சிறிய வெளியீட்டைக் கொண்டு வந்தது. தற்போதைய திருவள்ளுவரின் படத்தை அவர் ஏன் அப்படி வரைந்தார் என்பதற்கான விளக்கம் அந்த வெளியீட்டில் இடம்பெற்றிருந்தது. திருவள்ளுவர் கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி மரம், செடி, கொடிகள், வீடுகள் ஏதும் இல்லாமல் அவரைச் சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படி இந்த உருவம் உருவாக்கப்பட்டது. தன்னுடைய சிந்தனை, செயல், ஆடை ஆகியவற்றை அழுக்குத் தீண்டாமல் இருப்பதற்காக அவர் ஒரு சிறிய மரப் பலகை மீது இருப்பது போன்று அமைக்கப்பட்டது. 'தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு” ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் திருவள்ளுவர் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டதாக அந்த வெளியீட்டில் கூறுகிறார் வேணுகோபால் சர்மா. பின்னால் வளர்க்கப்படும் குடுமியும் வெட்டப்பட்ட சிகையும் பல இனக் குழுக்களுக்கு அடையாளமாகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பதுபோல வரையப்பட்டது. இந்தப் படம் வரைந்து முடிக்கப்பட்ட பிறகு நாகேஸ்வரபுரத்தில் ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார் வேணுகோபால் சர்மா. காமராஜர், சி.என். அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன், எழுத்தாளர் கல்வி உள்ளிட்ட பல முதன்மைப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர். பிறகு இந்தப் படம், 1960ல் சி.என். அண்ணாதுரையால் காங்கிரஸ் திடலில் வெளியிடப்பட்டது. பிறகு இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5065 திங்கட் கிழமை அன்று (23.03.1964) தமிழக சட்டமன்றத்தில் திருவள்ளுவரின் உருவத்தை திறந்து வைக்கிறார் குடியரசு துணைத் தலைவர் ஜாகிர் உசைன், பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது. இதற்குப் பின், மு. கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே இந்தப் படம் அரசுப் பேருந்துகள் அனைத்திலும் இடம்பெறச் செய்யப்பட்டது. இந்தப் படமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படமாக அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் அடிப்படையிலேயே சென்னை மையிலாப்பூரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவரின் சிலை உருவாக்கப்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,328.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.