Show all

உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு நேரம் நீட்டிப்பு! ஆனால் தேர்தல் நாள் இன்னும் உறுதியாகவில்லை

உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குபதிவிற்கான நேரத்தை ஒன்றரை மணி நேரம் கூடுதலாக நீட்டிப்பு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த போதிலும் முறையான அறிவிப்புகள் அரசு தரப்பில் இருந்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் அணியமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கமாக காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் வாக்கு பதிவு நடைபெறும். தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி கூடுதலாக ஒன்றரை மணி நேரமாக அதாவது காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் வாக்குபதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நாள் குறித்த அறிவிப்பு அரசு தரப்பில் இருந்து முறையாக அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் வாக்கு பதிவுக்கான நேர நீட்டிப்பு குறித்த தகவலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.