தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் சில முதன்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். 02,தை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சுற்றுலாத் துறையில் முதன்மை இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு மெய்யியல் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் சில முதன்மைத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு அதிகமாக வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 12.50 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாரம்பரியத்தை ஆர்வத்தோடு கண்டு களித்து வருகின்றனர். அதேபோல உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 11 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இந்தியாவிலேயே சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு தான் முதன்மை இடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று சுற்றுலாத்துறை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். கோவை மாவட்டத்தில் பொழுதுபோக்கிற்கு பேரளவாக இடமில்லை. இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இங்கு மக்கள் பொழுதைக் கழிக்கும் வகையிலான இடங்கள் ஏற்படுத்தப்படும். சென்னையில் படகு இல்லம் உள்பட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவற்றை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருகிறோம். அதேபோல உதகையில் உள்ள படகு இல்லம் பைக்காரா நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பகுதிகளில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,495.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.