மருத்துவ கல்வி இயக்குனரகம் அதிரடி. உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாய பணி செய்யாவிட்டால் ரூ.50 லட்சம் அபராதம் 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 3 ஆண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் உள்ளன. அதில், ஒவ்வொரு ஆண்டும், 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சேர்ந்து உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளைப் பயின்று வருகின்றனர். அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பு முடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாகும். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் முடித்த மாணவர்கள் பலர் கட்டாய பணி செய்யவில்லை என தெரியவருகிறது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்காணலில் 3-ம் ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் பலர், அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருந்தும் பணியில் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. எனவே, பணியில் சேர விருப்பமில்லை என, எழுதி கொடுத்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம் வசூலிக்க அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை தலைவர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.