விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 03,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து வந்த நடிகை காயத்ரி ரகுராமின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ‘சனாதன கல்வியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, ‘கூம்பு வடிவில் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது ஹிந்து கோவில்கள்’ என்று தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்தப் பேச்சு ஹிந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாகவும் உள்ளதாகச் சொல்லி, விரைவில் தமிழக பாஜக கட்சிக்கு தேர்தல் வரவுள்ள நிலையில், தங்கள் முதலாளி விசுவாசத்திற்கு திருமாவளவன் அவர்களை பலிகடா ஆக்க முயன்றுள்ளனர் தமிழக பாஜகவினர். இதில் மிக மிகக் கூடுதலாக முதலாளி விசுவாசத்தை வெளிக்காட்டிக் கொள்ள வெளிச்சம் போட்டவர் நடிகை காயத்ரி ரகுராம். திருமாவளவனை கீச்சுவில் நாகரிகம் இல்லாமல் கடுமையாக விமர்சித்திருந்தார். நடிகை காயத்ரி ரகுராம். இதற்குப் பிறகு, தவறான வார்த்தைகளில் தொடர்ந்து திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம், திட்டியிருந்த நிலையில், திங்கட்கிழமை காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகை இட்டனர். காயத்ரி ரகுராம் தற்போது சென்னையில் இல்லை. அடுத்த புதன்கிழமை அன்று காலை பத்து மணிக்கு சென்னை சல்லிக்கட்டுக் கடற்கரைக்கு வரவிருப்பதாகவும் திருமாவளவனுக்கு துணிச்சல் இருந்தால் அங்கே வந்து ஹிந்துக்களைப் பற்றித் தவறாகப் பேசட்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், காயத்ரி ரகுராம் கீச்சு விதிமுறைகளை மீறியிருப்பதால் அவரது கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசும் தனக்கு ஆதரவாக வரவேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் அவரது கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் தொடக்க காலத்தில், ‘எல்லை மீறிய ஆபாசம் கொண்டது சைவமா? வைஷ்ணவமா? என்று பட்டி மன்றம் போடுவார்கள்; கூட்டம் அலைமோதும்; ஒட்டு மொத்த இந்தியாவும் பெரியார் என்றால் கிடுநடுங்கும். பிள்ளையார் சிலையை பெரியார் உடைத்ததற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர் ராமன் நாயர் என்பவர் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்புக்கு முன் ஆஸ்திகர்களுக்கும் அறங்கூற்றுவருக்கும் விவாதம் நடக்கிறது. ‘பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் - நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?’ என்று அறங்கூற்றுவர் கேள்வி எழுப்புகிறார். ‘நாங்கள் நம்பும் கடவுளின் கற்பனை உருவம் எவ்வாறாயினும் அது எங்கள் ஹிந்து மக்களின் நம்பிக்கை. அந்தக் கற்பனை உருவத்தை அவமதிப்பதும் உடைப்பதும் எங்கள் மனதை புண்படுத்துகின்றது’ என்கிறார்கள் வழக்கு தொடுத்த ஆத்திகர்கள். இப்போது நீதிபதி ராமன் நாயர் கூறுகிறார்: ‘அவர்கள் பிள்ளையாரை திடீரென உடைக்கவில்லை. கடந்த 3 மாதங்களாக பிள்ளையார் குறித்து கருத்துப்பரப்புதல் செய்திருக்கிறார்கள். பிள்ளையார் சிலைகள் செய்து அதை உடைக்கப் போகிறோம் என்று அதற்கான நாளையும் அறிவித்து அந்த குறிப்பிட்ட இடத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?’ என்று கண்டித்துவிட்டு பெரியார் பிள்ளையார் சிலை உடைத்த வழக்கை தள்ளுபடி செய்கிறார். இதன் தொடர்ச்சியாக இதழியலாளர்கள் பெரியாரிடம் எதற்காக பிள்ளையார் சிலையை உடைத்தீர்கள். அதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்ப பெரியார் கூறுகிறார்: ‘கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையார் பிறப்பு குறித்த பார்ப்பனர்களின் ஆபாசக் கதைகளைத்தான் கண்டித்தோம். என்றார் பெரியார். பிள்ளையார் சிலை உடைப்பு அதன் அரசியல் என்ன? அதனுள் புதைந்துள்ள பிள்ளையார் பிறப்பு ஆபாசக் கதைகள் என்ன? அது அறிவிற்கு பொருத்தமானதா? இந்தக் கற்பனை ஆபாசக் கதைகளை எப்படி இயல்புக்கு மாறான பிறப்பை கொண்டாட முடியும்? அப்படி நாம் கொண்டித்ததான் தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் யாரால் உருவாக்கப்படுகிறது? அதற்கான நோக்கம் என்ன என்பதை விவாதிக்க முற்படுபவர்களோடு நமக்கு முரண்பாடுகள் இல்லை. என்று பெரியார் பலமுறை தெரிவித்திருந்திருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,341.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.