சென்னையில் இருந்து திருச்சி இடையே பெரும்பாலான
இடங்களில் இரட்டை வழித்தடம் தயாராகி விட்டதால் இனி பயண நேரம் 6 மணியில் இருந்து 4 மணி
நேரமாக குறையும். சென்னை-கன்னியாகுமரிக்கு
இரட்டை தொடர்வண்டி பாதை அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்தப்
பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில்
இருந்து திருச்சி வரையிலான 334 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாலான இடங்களில் இரட்டை
வழிப்பாதை அமைக்கப்பட்ட நிலையில் வாலடி- திருச்சி இடையிலான 20 கிலோ மீட்டர் தூரத்தில்
மட்டும் பணிகள் தொடங்கப் படாமல் இருந்தது. இந்தப்
பணிகள் நிறைவடைந்து இருப்புப் பாதை பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் ஆய்வு செய்து தொடர்வண்டிகளை
இயக்க அனுமதி கொடுத்து விட்டனர். இரட்டை
வழித்தடம் தயாராகி விட்டதால் இனி சென்னை-திருச்சி இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும்.
தற்போது சராசரியாக 6 மணி நேரம் ஆகிறது. இனி 4 மணி நேரத்தில் சென்று விடலாம். 100 கிலோ
மீட்டர் வேகத்தில் தொடர்வண்டி இயக்கப்படும். மேலும்
இந்த இரட்டை வழிப்பாதை பயன்பாட்டுக்கு வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல தொடர்வண்டிகளின்
பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறையும். இது தொடர்பாக இருப்புப் பதை இயக்க உயர் அதிகாரிகள்
ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக
தொடர்வண்டிகள் பயண நேர மாறுதல் அக்டோபர் மாதம் வெளியாகும் இருப்புப்பாதை துறை கால அட்டவணையில்தான்
வெளியிடப்படும். ஆனால் இரட்டை வழிப்பாதை தயாராகி விட்டதால் ஒரு மாதத்திற்குள் தெடர்வண்டிகளின்
பயண நேர குறைப்பு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. வழக்கமாக
தென்மாவட்டங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகள் இன்னொரு தொடர்வண்டிக்கு வழிவிட்டு ஆங்காங்கே
நடுவழியில் நிறுத்தப்பட்டு இருக்கும். இனி அந்த மாதிரி இடையூறுகள் ஏற்படாது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.