Show all

சல்லிக்கட்டுக்காக தொடரும் மாணவர்கள் போராட்டம்; மதுரையில் பிரம்மாண்ட பேரணி

பொங்கல் விழா நாளில் சல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். மதுரையில் 3வது நாளாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

     பொங்கல் விழாவிற்;கு சல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பற்ற வைத்த தீப்பொறி மதுரை, திருச்சி, புதுச்சேரி என பற்றி பரவி வருகிறது. திங்கட்கிழமையன்று மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மதுரை கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஜெய்ஹிந்த் புரம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், மீண்டும் பிரதான சாலைக்கு வந்து நடுவண் அரசு, பீட்டா அமைப்பை கண்டித்து முழக்கமிட்டனர்.

     சட்டக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியைப் புறக்கணித்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணியாக சென்றனர். அங்கு சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர். பிரம்மாண்ட பேரணி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை முதலே திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நீண்டது. இதனால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. சல்லிக்கட்டு வேண்டும் சல்லிக்கட்டு எங்களின் உரிமை. நடுவண் அரசு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பு இதில் தலையிடக்கூடாது என்றும் பேரணியாக சென்ற மாணவர்கள் தெரிவித்தனர். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க நினைப்பதா என்றும் கேள்வி எழுப்பினர். சல்லிக்கட்டு நடத்துவோம் பொங்கல் விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. ஆனால் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நடுவண் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. சல்லிக்கட்டு நடத்த நடுவண் அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே சல்லிக்கட்டை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தொடங்கி, மதுரை, திருச்சி, புதுச்சேரி என சல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் போல, மீண்டும் ஒரு நடுவண் அரசுக்கு எதிரான தமிழக மாணவர் போராட்டத்திற்கு வழிகோலுமா? நடுவண் அரசு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.