1330 திருக்குறளையும் எழுதிவிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம். இதுதான் பொதுமக்கள் பாராட்டிய தண்டனை. பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் வழங்கிய தண்டனை. 20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரு வேறு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சண்டையிட்டு உள்ளதால் அவர்களுக்கு மாறுபட்ட முறையில் தண்டனை வழங்கியுள்ளனர் பாளையங்கோட்டை காவல் துறையினர். இந்த மாணவர்கள் பள்ளிக்கும் செல்லாமல், வீட்டினருக்கும் தெரியாமல், பாளையங்கோட்டை வாஉசி விளையாட்டரங்கத்தில் அமர்ந்து, அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு வரும் மாணவிகளை பார்ப்பதும், அவர்களுடன் பேச முற்படுவதும் என பல குறும்புத் தனங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இரண்டு பள்ளிகளில் 11மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே சில பிரச்சினைகளும் ஏற்பட்டு உள்ளது. அரசு உதவி பெறும் இவ்விரண்டு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் அனைவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று 1330 குறளையும் எழுதி விட்டு வீட்டிற்கு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் பெற்றோரையும் வரவழைத்து காவல்துறையினர் வழங்கிய தண்டனை குறித்தும் எதற்காக இந்தத் தண்டனை என்றும் விவரித்துள்ளனர். மாணவர்களுக்கு காவல் துறையினர் வழங்கிய இந்த தண்டனையை அந்தப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,328.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.