Show all

பாஜகவின் இந்தியத் தலைமைக்கு- எதிர்வினையாற்றும் தமிழக பாஜக!

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியோ, தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு தன்னால் இயன்ற வரை பாடாற்றி வரும் உன்னத நிலையில், தமிழக பாஜகவினரோ நோட்டாவை விட ஒற்றை வாக்கு கூட தமிழகத்தில் பாஜக வாங்கிவிடக் கூடாது என்பதற்காக கடும்தவம் புரிந்து வருகின்றார்கள்.

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ கீச்சுப் பக்கத்தில், 
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்”

என்ற குறளுக்கு  ‘கடவுளைத் தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்’  என்ற பொருள் எழுதி-
அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று திகவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் அறிந்து தெளிய வேண்டும். என்று பதிவிட்டுள்ளது. 

அத்துடன் திருவள்ளுவரின் படம் ஒன்றும் பகிரப்பட்டிருந்தது. பாஜக பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்தப் படத்தில், வள்ளுவரின் உடைக்கு காவி வண்ணம் தீட்டப்பட்டு இருந்தது. திருவள்ளுவரின் கை மற்றும் நெற்றியில் திருநீறு பட்டை இருப்பதைப் போலவும் வரையப்பட்டு இருந்தது. 

இதற்கு பதிலடியாக தமிழகபாஜக திருவள்ளூவரை அவமதித்து விட்டதான கீச்சு இந்திய அளவில் தலைப்பாகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக பாஜகவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள் என கவிஞர் வைரமுத்துவும் கண்டித்து கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியோ! தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு தன்னால் இயன்ற வரை பாடாற்றும் முகமாக- 
சீன அதிபரை மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்து பெருமைப் படுத்துகிறார். 
அமெரிக்காவில் சென்று தமிழே உலகத்தின் முதன் மொழி என்று பாராட்டுகிறார். 
தாய்லாந்து சென்று திருக்குறளின் “தாய்” மொழிபெயர்ப்பை வெளியிட்டு திருக்குறளை தமிழிலேயே சொல்லி பாராட்டுகிறார்.
அடுத்து, உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண தலைமைஅமைச்சர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர், பொங்கல் விழாவின் போது தமிழகம் வர உள்ளனர் என்று தகவல் வேறு வெளியாகியுள்ளது.
அண்மைக்காலத்தில் மோடிஅவர்கள் தமிழக்கு பெருமைசேர்க்கும் விதமாக பலவாறு பேசியிருக்கிற உன்னத நிலையில்-
பாவம்! தமிழக பாஜகவினரோ நோட்டாவை விட ஒற்றை வாக்கு கூட தமிழகத்தில் பாஜக வாங்கிவிடக் கூடாது என்பதற்காக கடும்தவம் புரிந்து வருகின்றார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,325.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.