Show all

அமேசான் நிறுவனத்தின் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி

அமேசான் நிறுவனத்தின் கனடா பிரிவு இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி போன்ற கால் மிதியடி விற்பனைக்கு வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக இருப்பதாக அமேசானுக்கு எதிராக விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்து வருகிறது. இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,

     “அமேசான் முதலில் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்கவேண்டும். அமேசான் நிறுவனம் எங்களது தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலான அனைத்து பொருட்களை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,” என்று சுஷ்மா சுவராஜ் கீச்சகத்தில் எச்சரித்து உள்ளார். இது உடனடியாக செய்யப்படவில்லை என்றால் நாங்கள் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா வழங்க மாட்டோம். முன்னதாக வழங்கப்பட்ட விசாக்களையும் ரத்து செய்வோம்,” என்று எச்சரித்து உள்ளார் சுஷ்மா சுவராஜ்.

     முன்னதாக சுஷ்மா சுவராஜ் இப்பிரச்சனையை அமேசானிடம் எடுத்துச் செல்ல கனடாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கேட்டுக் கொண்டார்.

     அமேசானில் இந்திய தேசியக் கொடி மட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் தேசிய கொடிகளும் கால்மிதியடிகள் போல விற்பனைக்கு வைக்கப்பட்டது கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது. அமெரிக்க, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனம், கண்டனம் காரணமாக அமேசான் நிறுவனம் தேசியக் கொடி போன்ற கால் மிதியடிகள் அனைத்தையும் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியள்ளது. இருப்பினும், அமேசான் நிறுவனத்திற்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.