அய்யம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது அய்யம்பட்டி பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டதால், மாறுதல் வழங்க வேண்டும் என்றார். அடக்கொடுமையே! 05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திண்டுக்கல் புனித ஜான்பால் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பணியிட மாறுதலுக்கு 120 பேரும், பதவி உயர்வுக்கு 29 பேரும் விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமையில் கலந்தாய்வு நடந்தது. இதில் குசிலியம்பாறை அருகேயுள்ள அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து இருந்தார். ஆனால், பள்ளியில் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறவில்லை என்று கூறி அவருடைய மனுவை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் ஏமாற்றத்துடன் அவர், கலந்தாய்வு நடக்கும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தார். இதற்கிடையே பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு குசிலியம்பாறை வட்டார பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டனர். அப்போது அய்யம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா, மீண்டும் சென்று இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார். அப்போது அய்யம்பட்டி பள்ளியில் 2 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். அந்த பள்ளியில் பணியாற்றி 3 ஆண்டுகள் நிறைவு அடைந்து விட்டதால், மாறுதல் வழங்க வேண்டும் என்றார். ஆனால் வைகாசி (ஆங்கிலம்- மே) மாத கணக்குபடி 3 ஆண்டுகள் நிறைவு பெறாததால் பணியிட மாறுதல் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த தலைமை ஆசிரியை இந்திரா, முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்பு அமர்ந்தும், மேலும் தரையில் படுத்தும் போராட்டம் நடத்தினார். இதையடுத்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தலைமை ஆசிரியையை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆசிரியை இடமாறுதல் கேட்டது- கல்வித்துறை அதிகாரிகள் முன்பு அமர்ந்தும், மேலும் தரையில் படுத்தும் போராட்டம் நடத்தியது எல்லாம் சரிதான்; அதற்கு அவருக்கு உரிமையில்லை என்று யாரும் மறுக்க முடியாது. ஆனால், இரண்டு மாணவர்களை வைத்துக் கொண்டு மூன்று ஆண்டுகள் சம்பளம் வாங்கியிருக்கிறார். “நான் பள்ளியில் சேரும் போது இரண்டு மாணவர்கள்தான் இருந்தார்கள்; என்னால் முடிந்தவரை போராடி தற்போது இந்தப் பள்ளியில் பத்து மாணவர்களைச் சேர்த்து இருக்கிறேன். நான் இதே போன்று வேறுபள்ளிகளிலும் தொண்டாற்ற எனக்கு பணிமாறுதல் தாருங்கள்” என்று கேட்டிருந்தால், இந்தச் செய்தி இணையத்தில் தீயாகி உங்களுக்கு பணிமாறுதல் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருந்திருக்கும். ஆனால்- அரசுப்பள்ளிதானே என்கிற அசட்டையில் மூன்று ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல், இப்பொழுது குழந்தை போல தரையில் படுத்து அடம் பிடித்தால் எப்படி? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,343.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.