Show all

சல்லிக்கட்டு அவசர சட்டம் கோரி டெல்லி விரையும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள்

சல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்திக்கின்றனர். இச்சந்திப்பில் சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை இயற்ற வலியுறுத்தப்படுகிறது.

     தமிழகத்தில் பொங்கல் திருநாளின் போது சல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

     காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலில் காட்டில் வாழும் விலங்குகளுடன் தமிழர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் சல்லிக்கட்டு மாடுகளும் சேர்க்கப்பட்ட கொடுமை முந்தைய காங்கிரசு அரசில் நடந்தது. இதனால் தமிழகத்தில் சல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

     பல்லாயிரம் ஆண்டுகாலமாக தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருந்து வரும் ஏறுதழுவுதல் என்கிற சல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

     இந்தத் தடையை நீக்கி சல்லிகட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து போராடிக் கொண்டிருக்கிறது.

     இது தொடர்பாக நடுவண் அரசுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதங்களை அனுப்பி வருகிறார். ஆனால் நடுவண் அரசோ உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரட்டும் என போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

     இந்த நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை சந்திக்க உள்ளனர். இச்சந்திப்பின் போது, சல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை நடுவண் அரசு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.