Show all

பாதிப்பில் இருவர்- பரபரப்பில் மக்கள்- அதிர்ச்சியில் அதிமுக! அதிமுக விளம்பரத் தட்டியை அடுத்து, அதிமுக கொடிக்கம்பமா?

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்து, இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கும் வகையாக பாதிப்பு அடைந்திருக்கும் ஒரு இளம்பெண், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு  இளைஞர்- அதிமுக விளம்பரத் தட்டியை அடுத்து அதிமுக கொடிக்கம்பமா? என்று மக்கள் நடுவே பரபரப்பு கிளம்பியிருக்கிறது. 

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரசியல் கட்சிகள் விளம்பரத்தட்டிகள் அமைப்பதும் தவறில்லை, கொடிக்கம்பங்கள் அமைப்பதும் தவறில்லை. விளம்பரத்தட்டிகளை உறுதியாகவும், உரிய பாதுகாப்புடனும் அமைக்க வேண்டும். பழுதடைந்த கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும். 

வணிக நிறுவனங்கள் வானளாவ விளம்பரத் தட்டி அமைப்பதில்லையா? மின்சார வாரியம் தெருவெங்கும் கம்பங்களை நடுவதில்லையா என்ன? அரசியல் கட்சிகள் பொறுப்பில்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றன என்பதுதாம் உண்மை. எதன் தொடர்பிலானது இந்தச் செய்தி என்கின்றீர்களா!

கோவை சிங்காநல்லூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், பார வண்டி மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட இருவர் காயமடைந்தனர். 

சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக விளம்பரப் தட்டி சரிந்து விழுந்ததில் சுபசிறி என்ற பெண் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைப்பதற்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து விளம்பரத் தட்டிகள் வைக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தில் குறைந்தன.

தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது. இதைக் கண்ட அவர் வாகனத்தை திடீரென நிறுத்த முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த பார வண்டி மோதியதில் அவரது இரு கால்களும் நசுங்கின. பார வண்டியும் கட்டுப்பாட்டை இழந்து மற்றோர் இருசக்கர வாகனத்தில் மோதியதில் நித்யானந்தம் என்ற இளைஞர் காயமடைந்தார்.

இதனையடுத்து சாலையில் மயக்கமடைந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் இளைஞர் நித்யானந்தம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காயமடைந்த பெண்ணுக்கு இரு கால்களிலும் நரம்புகள் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறை,  பார வண்டியை பறிமுதல் செய்து, பார வண்டி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

கொடிக்கம்பம் அமைக்க ஒப்பந்தம் பெற்றவர், கொடிக்கம்பம் அமைக்க ஒப்பந்தம் கொடுத்த அதிமுக கட்சிக்காரர், கட்சிக்காரர்களிடம் கட்சியின் பெருமையை பறைசாற்ற இது போன்ற விளம்பர யுக்திகளை விரும்பும் கட்சித் தலைவர்கள்- எல்லாம் கூட இந்த குற்ற விபத்தில் தொடர்புடையவர்கள்தாம் என்கின்றனர் மக்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,334.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.