சரக்கு மற்றும் சேவைவரி விதிப்புக்கு எதிராக தமிழ்
திரைப்படத்தின் போராட்டம் இன்று தொடங்கிவிட்டது. இன்று தமிழகத்தின் மொத்த திரையரங்குகளும்
மூடப்பட்டன. காலைக் காட்சி, பகல் காட்சிகள் ரத்தாகின. அடுத்து மாலை மற்றும் இரவுக்
காட்சிகளும் ரத்து என்பதில் திரையுலகினர் உறுதியாக உள்ளனர். திரைப்பட
கட்டணத்திற்கு அதிகபட்சமாக 28 விழுக்காடு சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த
நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் திரைப்பட கட்டணத்திற்கு 30 விழுக்காடு
கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது திரைப்படத்திற்கு
மட்டும் இரட்டை வரி. மொத்தம் 58 விழுக்காடு வரி. இதனால் திரைப்படக் கட்டணம் 30 விழுக்காடு
வரை உயர்ந்துள்ளது. இந்தச்
சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை
ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இன்று முதல் திரையரங்குகளை மூடுவோம் என்றும்
திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதைத் தவிர்க்க பல கட்ட பேச்சு நடந்தது. திரையரங்குகளை
மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு
தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார்.
திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
என்று வற்புறுத்தினார். இருப்பினும்
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டத்திற்கு
பிறகு அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில்,
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் இன்று 1050 திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக திரையரங்குக்குப்
போய் திரைப்படம் யபார்க்கும் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.