தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் டோக்கியோ பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. 22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்யோவில் பதினான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கிய மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 163 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவை பொறுத்தவரை 9 வகையான ஆட்டங்களில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சிறகுப்பந்து இறுதிப்போட்டியில், சீன வீரர் காய் சூ மானை, இந்திய வீரர் கிருஷ்ணா நகர் எதிர்கொண்டு தங்கம் வென்று அசத்தினார். இதேபோல் ஆடவருக்கான மற்றொரு சிறகுப்பந்து இறுதிப்பேட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸை எதிர்கொண்ட இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜூக்கு, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள யதிராஜ், நொய்டா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவார். இதன் மூலம் பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது. தமது மிகப்பெரும் கனவு நிறைவேறியிருப்பதாக பேட்மின்டனில் தங்கம் வென்ற கிருஷ்ண நகரும், பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என எண்ணியதே இல்லை என, வெள்ளிப்பதக்கம் வென்ற யதிராஜூம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டோக்யோ தேசிய திடலில் பாராலிம்பிக் தொடரின் நிறைவு விழா நடைபெற்றது. வீரர்களுக்கான அணிவகுப்பில், இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அவனி லெகரா இந்தியக்கொடி ஏந்திச்சென்றார். பனிரெண்டு நாட்கள் நடந்த போட்டிகளின் நிறைவு விழா வாண வேடிக்கைகளுடன் பார்வையாளர்களை கவரும் வகையில் வண்ணமயமான நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்த பாராலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 12,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126: அன்று (28.08.2024) தொடங்குகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,70,999.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.