கத்தாரின் லுசைல் திடலில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய விளையாட்டு உலகத் தேடலாக அமைந்ததைக் கண்டு வியந்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை. 05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பயனர்களின் நெரிசல் அதிகமாக இருந்ததாகவும், அனைத்தும் உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி தொடர்பானது என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கத்தாரின் லுசைல் திடலில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல், இரு அணிகளும் மாற்றி மாற்றி இலக்கு வீழ்த்த, கோப்பையை வெல்வதில் இரு அணிகளும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வெற்றியாளரை தீர்மானிக்க போட்டியில் கூடுதல் நேரம் ஒதுக்கியும் இரு அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு கோப்பைக்காக போராட, இறுதியில் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து அதிரடி வெளியேற்றம் முறையில் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட அதிரடி வெளியேற்றத்தில் (பெனால்டி சூட் அவுட்டில்), அர்ஜென்டினா அணி 4-2 என்ற இலக்கு கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. கத்தார் கால்பந்து உலக கோப்பையில் அர்ஜெண்டினாவின் அணியின் வெற்றியை அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள அர்ஜென்டினா அணியின் நயவர்களும் குதுகலத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் கூகுள் தொடங்கப்பட்ட 25 ஆண்டு கால வரலாற்றில் எந்த நாளும் இல்லாத பயனர்களின் நெரிசல் நேற்று இரவு இருந்ததாகவும், அதில் அனைவரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை பற்றியே தேடியுள்ளனர் என்றும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,468.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.