சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ரன்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர், ஷிகார் தவானுடன், தோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் அடித்தார். 128 பந்துகளில் 125 ரன்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தோனி 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ரன்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. திக்வெல்லா மற்றும் குனதிலகா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். திக்வெல்லா 7 ரங்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்த நிலையில், குணதிலகா (76 ரன்), மெண்டிஸ் (89 ரன்) இருவருமே ரன் அவுட் ஆகினர். இதனையடுது, களமிறங்கிய பெரேரா மற்றும் கேப்டன் மேத்யூஸ் நிதானமாகவும் பொறுப்புடன் ஆட இலங்கை 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்து வென்றது. மேத்யூஸ் 45 பந்துகளை சந்தித்து 52 ரன் எடுத்தார். குணரத்னே 21 பந்தில் 34 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். பெரேரா 44 பந்தில் 47 ரன் எடுத்து ரிடையர்ட்ஹட் முறையில் வெளியேறினார். இந்திய பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இந்திய தரப்பில் கேப்டன் கோஹ்லி உள்பட 7 பேர் பந்து வீசியும் புவனேஸ்குமார் மட்டும் ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.