குஜராத்தில் நடைபெற்ற கலாசார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடி அசத்தினார். இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி. 01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத் மாநிலம், பாவ் நகரில் உள்ள சுவாமி நாராயண் குருகுலத்தில் பெண்கள் மேம்பாட்டு மன்றத்தின் சார்பில் கலாசார விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள், ‘தல்வார் ராஸ்’ எனறு அழைக்கப்படக்கூடிய குஜராத்தின் பாரம்பரிய நடனமான வாள் நடனம் ஆடினர். மாணவிகள் இரு கைகளிலும் வாள்களை ஏந்திக்கொண்டு நடனம் ஆடினர். அப்போது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானியை மாணவிகளுடன் சேர்ந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டனர். அவரும் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் இறங்கி இரு கைகளிலும் வாளேந்தி சுழற்றி நடனமாடி அசத்தினார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாகி வருகிறது. இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு நடனம் ஆடத் தெரியுமா? என்று மூக்கில் விரல் வைப்பவர்களுக்காக- இந்தியத் துகில்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி குறித்த இந்தப் புள்ளிவிவரங்கள்: (!) இவரது தந்தை ஸ்ரீஅஜய்குமார் மல்கோத்ரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். சிறிய தூதஞ்சல் நிறுவனத்தை நடத்தினார். ஸ்மிரிதியின் அம்மா ஷிபனி பஹ்ஷி, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். (!) நடுத்தர குடும்பம் என்பதால், 10-ம் வகுப்பு படிப்பிற்கு பிறகு ஸ்மிரிதி தன் சொந்த காலில் நிற்க துணிந்தார். அதோடு குடும்ப பாரத்தையும் சுமக்கத் தயாரானார். (!) சிறுஅகவையில், அழகு சாதனப்பொருளுக்கான விளம்பரத்தில் நடித்து, ரூ.200 சம்பாதித்ததை, இன்றும் ஸ்மிரிதி மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார். (!) விளம்பரஅழகாளர் துறையில் சாதிக்க விரும்பிய ஸ்மிரிதிக்கு, அத்துறையில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதனால் நடுத்தர குடும்ப பெண்களின் மேல் திணிக்கப்பட்டிருந்த சமூக பார்வை, கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து, விளம்பரஅழகாளர் துறையில் கால் பதித்தார். (!) விளம்பரஅழகாளர் மட்டுமின்றி, இந்தியஅழகி பட்டத்தை வெல்வதும், ஸ்மிரிதியின் கனவாக இருந்தது. அதனால் இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மிஸ்.இந்தியா அழகி போட்டியில் கலந்துகொண்டார். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் துவண்டுவிடாமல், ‘விளம்பரஅழகாளர் நகரம்’ எனப்படும் மும்பை நகருக்குள் வாய்ப்பு தேடி அலைந்தார். (!) விளம்பரஅழகாளர், நடிப்பு, அழகிப்போட்டி என பலதுறைகளில் வேலைத்தேடிக்கொண்டிருந்த ஸ்மிரிதி, சில காலங்கள் ‘மெக்-டோனல்ஸ்’ நிறுவனத்தில் சேவையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். (!) ஸ்மிரிதியின் விடாமுயற்சி, சின்னத் திரையில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஹிந்தி திரையுலக வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ‘ஊ லா லா லா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஸ்மிரிதிக்கு கிடைத்தது. (!) அந்த நிகழ்ச்சியைக் கலகலப்பாக தொகுத்து வழங்கிய ஸ்மிரிதிக்கு, ஹிந்தி திரைத் துறையின் புகழ் தயாரிப்பாளரான ஏக்தா கபூரிடம் இருந்து அழைப்பு வந்தது. இம்முறை, ‘கியூன்கி சாஸ் பீ கபி பாஹ_ தி’ என்ற தொடரில், ‘துல்சி விரானி’ என்ற வேடத்தில் அசத்தினார். (!) துல்சி விரானி கதாபாத்திரம்தான் ஸ்மிரிதியை, புகழ் உச்சிக்கு அழைத்துச் சென்றது. ஏனெனில் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தத் தொடர், எட்டு ஆண்டு வரை தொடர்ந்தது. இந்த 8 ஆண்டிற்குள் ஸ்மிரிதி, பல குடும்பங்களில் ஒருவராக மாறிவிட்டார். அதேசமயம் இவரது நடிப்பு திறமையை பாராட்டி, பலமுறை இந்தியன் டெலிவிஷன் அகாடமியின் விருதுகள் வழங்கப்பட்டன. (!) ‘துல்சி விரானி’ கதாபாத்திரத்தில் ஒருபுறம் அசத்திக்கொண்டிருந்த ஸ்மிரிதி, மெதுவாக அரசியல் வாழ்க்கையிலும் கால்பதித்தார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர், தற்போது இந்திய துகில்துறை அமைச்சர் வரை வளர்ந்திருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,339.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.