டெல்லி விமானநிலையத்தை கதிகலங்க வைத்த அந்தப் பை- 24 மணிநேர கண்காணிப்புக்குப்பின் திறந்து பார்த்தால்- ஒரே சிரிப்பு. 17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முனையம் மூன்றில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பயணிகள் வருகை வாயில் எண் 2 இல் பை ஒன்று கிடந்ததை இந்தியத் தொழிற்சாலை பாதுகாப்புப் படைக் காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனால் இரண்டு மணிநேரங்களுக்கு பயணிகள் நடமாட்டம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து ஒட்டுமொத்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பயணிகளிடம் கடும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சந்தேகத்துக்குரிய அந்த பை இந்தியத் தொழிற்சாலை பாதுகாப்புப் படைக் காவலர்கள் உதவியுடன் அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதை உடனடியாக திறந்து பார்க்காமல் 24 நேர கண்காணிப்பில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. மோப்ப நாய்களும் பையில் சக்திவாய்ந்த வெடிபொருள் இருக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டியது. அதைத் தொடர்ந்து பையில் உள்ள ஆபத்தின் தன்மையைக் கண்டறிய சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இன்று காலை திறந்தபோதுதான் அந்த பையில் தீபாவளிப் பலகாரங்கள் இருந்தது கண்டு காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இந்தியத் தொழிற்சாலை பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஹேமிந்திரா சிங் கூறியதாவது: நேற்று நடந்த சம்பவத்தில் எந்தவித ஆபத்துமில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. உரிமையாளரை அடையாளம் காண கண்காணிப்பு படக்கருவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டன. 24 மணி நேரத்திற்கு அந்தப் பையை நிபுணர்க்குழு ஆய்வு செய்ததில் அதில் சாக்லேட், முந்திரி மற்றும் தீபாவளி பலகாரங்கள் இருப்பதைக் கண்டனர். பையின் உரிமையாளரும் வந்து தனது தீபாவளி பலகாரங்கள் உள்ளிட்ட இன்னபிற பொருட்கள் கொண்டுவந்த பையைக் காணவில்லை என விமான நிலைய காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர் பையைத் தவறவிட்டதோடு அவசரமாக சென்றுவிட்டதால் அடுத்த இரண்டு மணிநேரத்தில் விமான நிலையத்தில் அனைத்து விசங்களும் பிரச்சினைக்குள்ளாகிவிட்டது. இவ்வாறு ஹேமிந்திரா சிங் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,325.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.