Show all

வெற்றி- யாருக்குசாதகமானாலும், தோல்வி- மக்களுக்கு! மகாராஷ்டிர அரசியல் விளையாட்டில் அடுத்து களத்தில் இறங்கும் அணிகள்

மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை 162 சட்டமன்ற உறுப்பினர்கள் திரட்டப்பட்டு இதழியலாளர்கள் முன்னர் அணியப்படுத்தப்பட்டனர்.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை 162 சட்டமன்ற உறுப்பினர்கள் திரட்டப்பட்டு இதழியலாளர்கள் முன்னர் அணியப்படுத்தப்பட்டனர்.

இந் இதழியலாளர்கள் சந்திப்பில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

சிவசேனையை சேர்ந்த 56 சட்டமன்ற உறுப்பினர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 சட்டமன்ற உறுப்பினர்கள், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 10 சட்டமன்ற உறுப்பினர்கள், என மொத்தம் 162 சட்டமன்ற உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் இருந்ததாக சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர்.

மொத்தம் உள்ள 54 தேசிய வாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் உள்பட இரண்டு பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நாளையே நிரூபிக்க வேண்டும் எனத் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வென்றிருக்கின்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஒரேமாதிரியான முயலுக்கு மூன்றுகால் பேர்வழிகளான, பாஜக-   சிவசேனா கூட்டணியில், விட்டுக் கொடுத்தல் இருவர் தரப்பிலும் முயற்கொம்பான நிலையில், கூட்டணி முறிந்தது. இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. அவர்களுக்கு சிவசோனாவோடு கூட்டணி வைப்பதில் அச்சம் இருந்த காரணத்தால் இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில்தான், யாரும் எதிர்பாராத வகையில் மிகப்பெரும் திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்ட்ராவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தவறு என்றும் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தன. இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ரமணா, அஷோக் பூஷன் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, உரிய உத்தரவு இன்று வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, இந்த வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று உத்தரவிட்டது. அதில், மகாராஷ்ட்ர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். மேலும், கமுக்க வாக்கெடுப்பாக அல்லாமல் வெளிப்படையான வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இன்று மாலைக்குள் இடைக்கால பேரவைத்தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்க வேண்டும் என்றும் உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,348.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.