இந்தியாவில் தற்போது நான்காவது தலைமுறை இணையம் பயன்பாட்டில் உள்ளது. நான்காவது தலைமுறையைவிட ஐந்தாவது தலைமுறையின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் நேற்று அதற்கான ஏலம் தொடங்கியது. 11,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்தாவது தலைமுறை அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 72 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.4.3 லட்சம் கோடி கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. அதானி நிறுவனம் தனிப் பயன்பாட்டுக்காக இந்த ஏலத்தில் கலந்துகொள்கிறது. மற்ற மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த காலாண்டுக்குள் ஐந்தாவது தலைமுறை சேவையை பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்துக்கான வைப்பு நிதியாக ஜியோ ரூ.14,000 கோடி, ஏர்டெல் ரூ.5,500 கோடி, வோடபோன் ஐடியா ரூ.2,200 கோடி, அதானி குழுமம் ரூ.100 கோடி அளவில் செலுத்தியுள்ளன. குறைந்த அதிர்வெண், நடுத்தர அதிர்வெண், உயர் அதிர்வெண் என மூன்று வகைகளில் ஐந்தாவது தலைமுறை அலைக்கற்றை ஏலம் விடப்படுகிறது. 600, 700, 800, 900, 1,800, 2,100, 2,300 மெகாஹெர்ட்ஸ் ஆகியவை குறைந்த அதிர்வெண்வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 3,000 மெகாஹெர்ட்ஸ் நடுத்தர அதிர்வெண் கீழும், 26 ஜிகாஹெர்ட்ஸ் உயர் அதிர்வெண் கீழும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருபது ஆண்டுகால பயன்பாட்டுக்கான இந்த ஏலத்தில் நிறுவனங்களின் நிதிச் சிக்கலைக் குறைப்பதற்காக, ஏலத் தொகையை 20 தவணைகளாக செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நிறுவனங்கள், அலைக்கற்றைக்கான தொகையை மொத்தமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின்போது அவ்வாண்டுக்கான தொகையை செலுத்திக்கொள்ளலாம். ஏலத்தை முன்னிட்டு முந்தாநாள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போபால், டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் ஐந்தாவது தலைமுறை முன்னோட்ட சோதனை நடத்தியது. இந்தியாவில் தற்போது நான்காவது தலைமுறை பயன்பாட்டில் உள்ளது. நான்காவது தலைமுறையைவிட ஐந்தாவது தலைமுறையின் வேகம் 10 மடங்குஅதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகளின் முடிவில் ஏலத் தொகை ரூ.1.45 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,322.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.