வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இந்தக் கோரிக்கை எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாக தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது. 14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக முதலீடுகள் குறைந்துள்ளன. மக்களின் வாங்கும் சக்தி பலவீனமாகியுள்ளது. நிறுவனங்களின் வரியைக் குறைத்தபோதே, பல நிறுவனங்கள் இத்துடன் வருமானவரி விலக்கு உச்சவரம்பையும் தளர்த்தி வாங்கும் சக்தியை ஊக்குவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தன. வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவன தலைவர் ராமதாசு தெரிவித்துள்ளார்! வருமானவரியை முற்றாக ஒழித்திட வேண்டும் என்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்து வருகிறார். உலகில் பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் வருமானவரி இல்லை. கத்தார், உலகில் வரியேயில்லாத வளமான நாடாக இயங்கி வருகிறது. வருமானவரி விலக்கு உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது இன்று நேற்றைய கோரிக்கை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தே இந்தக் கோரிக்கை எதிர்பார்ப்பும், ஏமாற்றமுமாக தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகிறது. இந்த நிலையில், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் 2வது வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யவுள்ளார். வரும் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வரி விலக்கு சலுகைகளை ரத்து செய்துவிட்டு வருமானவரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த இந்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன் பெரு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கார்பரேட் நிறுவன வரி 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. ஆனால், ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் 30 விழுக்காடு வரை வரி செலுத்துகின்றனர். வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் இவர்களுடைய வரி வரம்பு மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு மாதங்களில் பதிகை செய்யவுள்ள அவரது இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தில் இந்த எதிர்பார்ப்பு நிறைவடையுமானால் வருமான வரி அடுக்குகளும் புதுப்பிக்கப்படும். தற்போது, வருமானவரி விலக்கு உச்சவரம்பு 2.5 இலட்சமாக இருக்கும் நிலையில், வரும் ஆண்டில் ஐந்து இலட்சமாக மாற்றப்படலாம் என்றும் அப்படி மாற்றப்படுமானால்; 4.8 கோடி பேர்கள் பலனடைவார்கள் என்று தெரிய வருகிறது. வருமான வரி செலுத்துவோர்களில் 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 4.8 கோடி பேர்களும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 2.1 கோடி பேர்களும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 60.4 லட்சம் பேர்களும், 20 லட்சம் முதல் 50 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 18.8 லட்சம் பேர்களும், 50 லட்சம் முதல் 1 கோடி வரை வருவாய் ஈட்டுவோர் 3.2 லட்சம் பேர்களும், 1 கோடி முதல் 5 கோடி வரை வருவாய் ஈட்டுவோர் 1.3 லட்சம் பேர்களும், 5 கோடி முதல் 10 கோடி வரை வருவாய் ஈட்டுவோர் 7.4 ஆயிரம் பேர்களும் 10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் 4.2 ஆயிரம் பேர்களும் இந்திய அரசுக்கு வருமான வரி செலுத்தி வருகின்றனர். வீட்டுக்கடன், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படுமானால், இதுபோன்ற வரி விலக்கு சலுகைகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என நிதித்துறைக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,381.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.