ஓயாமல் நாட்டுப்பற்று குறித்து முழங்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் இந்திய நாட்டின் சொத்துக்களை விற்றதன் மூலம் திரட்டியுள்ள நிதி 4.04 லட்சம் கோடி ரூபாய்கள். 'சுழியம் என்பது இல்லாதது அல்ல; இருந்து இல்லாமல் போனது என்கிற வரலாறு' என்கிற தமிழியல் செய்திக்கு எடுத்துக்காட்டாகியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. 07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள், நிறுவனங்கள், பங்கு இருப்புகளை விற்பனை செய்வதன் மூலம் நிதி திரட்டி வருகிறது ஒன்றிய பாஜக அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை பணமாக்குவதோடு, சிலவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விடவும் ஒன்றிய பாஜக அரசு திட்டத்தை வகுத்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் அரசு சொத்துக்களின் விற்பனை மூலம் திரட்டியுள்ள நிதி 4.04 லட்சம் கோடி ரூபாய்கள். இந்த மாபெரும் நிதி திரட்டல் திட்டத்தில் சுமார் 59முறை 'வாய்ப்புகளோடு வணிகம்' மூலம் மொத்தம் 1.07 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒன்றிய பாஜக அரசு திரட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பங்குவணிக நிதியத்தில் 10 தவணைகளில் பங்குகள் விற்பனை செய்தது மூலம் மொத்தம் 98,949 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. ஏர் இந்தியா உட்பட 10 நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தது மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசுக்கு ஏறத்தாழ 69,412 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து 45 வழக்குகளில் அரசின் பைபேக் திட்டம் மூலம் சுமார் 45,104 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ளது. ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 17 நிறுவனங்களை பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு சுமார் 50,386 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. இந்திய வாழ்க்கை காப்பீட்டு நிறுவன ஐபிஓ மூலம் 20,516 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. ஒன்றிய அரசு பரதீப் எல்லைக்கடவு நிறுவனத்தின் 472 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது. இதேபோல் ஐபிசிஎல் பங்குகளை 219 கோடி ரூபாய்க்கும், டாடா கம்யூனிகேஷன் நிறுவன பங்குகளை 8,847 கோடி ரூபாயிக்கும் விற்றுள்ளது. 'சுழியம் என்பது இல்லாதது அல்ல; இருந்து இல்லாமல் போனது என்கிற வரலாறு' என்பதான தமிழியல் செய்தியை இந்த இணைப்பில் சென்று படித்தறியலாம். http://www.news.mowval.in/Editorial/katturai/Zero-375.html
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,470.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.