Show all

ஹிட்லரைக்காட்டி பாஜகவுக்கு கிச்சுகிச்சு மூட்டும் சிவசேனா! முறைத்துக் கொண்டிருக்கும் பாஜக

அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்கும் ஹிட்லருடைய பாணியை பாஜக பின்பற்றுவதாகவும், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார் என்று பாஜகவுக்கு, சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் சாபம் கொடுத்துள்ளார்.
 
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி பதினெட்டு நாட்கள் ஆகி விட்டது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பாஜக 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக-சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், சுழற்சி முறையில் முதல்வர் பதவி, 50 விழுக்காடு அமைச்சர் இடங்கள் என சிவசேனா விதித்த நிபந்தனையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை பாஜக ஏற்காததால், புதிய அரசு இதுவரை அமையவில்லை.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக ஹிட்லரை போல செயல்படுகிறது என சிவசேனா பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறுகையில், “தேர்தலில் அதிக இடங்களில் வென்றதாலேயே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க பாஜகவால் முடியாமல் போகும்பட்சத்தில் உடனே சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும். அரசியல் தலைவர்களை எல்லாம் அச்சுறுத்தி அடிமையாக்குவது ஹிட்லருடைய பாணி. ஆனால், அந்த சர்வாதிகாரி ஹிட்லரும் ஒரு நாள் அழிந்துபோனார். காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிராவுக்கு எதிரியும் அல்ல, டெல்லிக்கு மகாராஷ்டிரா அடிமையும் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

கொள்கை அடிப்படையில் பாஜகவும் சிவசேனாவும் ஒன்றுதான். சிவசேனாவிற்கு பாஜகவுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதில்தான் விருப்பம். அதனால் பாஜகவை எப்படியாவது கோபத்தை மூட்டி பணிய வைத்து விடலாம் என்று நினைக்கிறது போலும் சிவசேனா. ஆனால் பாஜகவிடம் அந்த பருப்பு வேகாதே. பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,332.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.