அனைத்து நடவடிக்கைகளுக்கும்
ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகள் உச்ச அறங்கூற்று மன்றத்தின் 5 அறங்கூற்றுவர்கள்
கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆதார் எண் முதலில் கொண்டு வந்த போது, நாட்டில்
நடைபெற்று வரும் குற்றங்களைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை நடுவண் அரசு கூறியது.
சமூக நல திட்டங்களுக்கு என்று பின்னர் நடுவண் அரசு தெரிவித்தது. இந்தியப் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள்
வெளிநாடுகளில் பதுக்கியுள்ள பணத்தை எடுத்து குடும்பத்திற்கு 15இலட்சம் வங்கிக் கணக்கில்
போடுவதற்காகவே இந்த ஆதார் இணைப்பெல்லாம் என்று மக்கள் நம்பியிருந்த வேளையில், ரூபாய்
தாள் செல்லாது அறிவிப்பால் பெண்கள் அஞ்சறைப் பெட்டியில் கணவனுக்குத் தெரியாமல் சேர்த்து
வைத்திருந்த இருப்பை வெளிக் கொணர்ந்த நிலையில்- அரசின் எந்த திட்டங்களுக்கும் இல்லை ஆதார்; மாற்றாக
மக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கே
ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது என்பது மக்களுக்குப் புரிந்து விட்ட நிலையில்,
ஆதாரை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச
அறங்கூற்று மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. ஆதாரை மக்களிடம் திணிப்பதற்கு,
எதிர் படும் தடைகளை முறியடிப்பதில் குறியாக உள்ள நடுவண் அரசு ஆதார் தொடர்பான வழக்குகளை
அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், ஆதாரை கட்டாயமாக்குவது தொடர்பான
வழக்குகளை, 5 அறங்கூற்றுவர்கள் கொண்ட அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளது.
ஆதார் தொடர்பான வழக்குகளை சூலை18,19 ஆகிய நாட்களில் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்
என்று அறங்கூற்றுவர்கள் தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.