மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது. மணிப்பூரில் கடந்த மூன்;று நாட்களாக நடந்து வரும் கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. 22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: மணிப்பூர் கலவரம் தற்போது உச்சத்தை அடைந்து உள்ளது. அங்கே இதுவரை 7500 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்தியப் படையும் அசாம் துப்பாக்கிப் படையும் அங்கே களமிறக்கப்பட்டு கலவரங்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது. மணிப்பூரில் மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி மலைவாழ் மக்கள் நிலப்பகுதியில் வசிக்கும் மெய்ட்டி மக்களுக்கும் இடையில்தான் மோதல். அங்கே 53விழுக்காடு மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ளனர். அதே சமயம் குகி உள்ளிட்ட பழங்குடி சமூகங்கள் 40விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. மணிப்பூரில் 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர் உள்ளனர். அவை பரவலாக நாகா பழங்குடியினர் (24விழுக்காடு) மற்றும் குகிஜோமி பழங்குடியினர் (16விழுக்காடு) என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 53விழுக்காடு மக்கள்தொகையைக் கொண்ட மெய்ட்டி பெரும்பான்மை சமூகமாக உள்ள அவர்கள் நிலப்பரப்பில் வசித்து வருகிறார்கள். இங்கே இப்போது சிக்கல் என்னவென்றால் பெரும்பாலான குகி பிரிவினர் கிறிஸ்துவர்கள். அவர்கள் மலைச்சாதியினர் பிரிவின் கீழ் வருகின்றனர். மெய்ட்டி பிரிவினர் ஹிந்துக்களாக வகைபடுத்தபடுகிறவர்கள். இஸ்லாமியர்கள் என்று உள்ளனர். இவர்கள் இதர பிற்படுத்தப்பட்;டோர் பிரிவில் வருகின்றனர். சிலர் மலைச்சாதியினர் பிரிவில் வருகின்றனர். இந்த மெய்ட்டி மக்களை மலைச்சாதிப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று மெய்ட்டி பிரிவு மக்கள் பல காலமாக கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். ஆனால் மெய்ட்டி பிரிவினர் மலைச்சாதியினராக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பழங்குடிகளான எங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று குகி என்று பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். அங்கே பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் மெய்ட்டி பிரிவினர் குகி பகுதி வசிக்கும் காட்டு பகுதியில் நிலங்களை எல்லாம் வாங்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே பாஜக அரசு மெய்ட்டி பிரிவினருக்கு மலைச்சாதியினர் இடஒதுக்கீடு கொடுக்க மும்முரமாக இருக்கிறது. பெரும்பான்மையினராக இருக்கிற இவர்களின் ஆதரவில் எளிதாக தேர்தல்களை வெல்ல முடியும் என்பதால் பாஜக இவர்களுக்கு மலைச்சாதியினர் இடஒதுக்கீடு கொடுக்க நினைக்கிறது. ஆனால் இதை குகி பழங்குடியினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் நிலப்பகுதியில் உள்ளனர். நாங்கள் காட்டில் உள்ளோம். எங்களுக்கே இந்த மண் சொந்தம். நாங்கள் சிறுபான்மையினர் அதனால் எங்களுக்குத்தான் இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று குகி பிரிவினர் தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திய பிறகு, மெய்ட்டீஸ்களுக்கு இதர பிற்பட்ட வகுப்பினர் தகுதி வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற தகுதி பெற்றனர். இந்த நிலையில்தான் கடந்த மாதம் மலைச்சாதியினர் பட்டியலில் மெய்ட்டி பிரிவை சேர்ப்பதற்கான பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அளிக்க மணிப்பூர் மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கோரிக்கையை முன் வைத்து மெய்ட்டி பிரிவை சேர்ந்த இடஒதுக்கீடு ஆர்வலர்கள் பதிகை செய்த பல மனுக்களை விசாரித்து அறங்கூற்றுமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக மெய்ட்டி பிரிவிற்கு மலைச்சாதியினர் இடஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளன. இது போக, காட்டு பகுதியில் கட்டியதாக கூறி 3 தேவாலயங்களை இடிக்கவும் அங்கே பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான கிறிஸ்துவர்களான குகி மக்கள் பெருஞ்சினத்தில் உள்ளனர். இதை எதிர்த்தே அங்கே குகி பிரிவினர் போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் மெய்ட்டி பிரிவினர் தாக்குதல் நடத்த, இந்த மோதல் தற்போது கலவரமாக உருவெடுத்து உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,604.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.