திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பில், இது தமிழ்நாடா? அல்லது வட மாநிலமா! என்று வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 14,தை,தமிழ்த்தொடராண்டு-5124: திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியைத் தாக்கும் காணொளி முந்தாநாள் சமூக வலைதளங்களில் தீயானது. இதையடுத்து, இந்த அடாவடி நடைபெற்ற பகுதியில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள், தந்தை பெரியார் திராவிடர்கழகத்தினர், மற்றும் தொழில் சங்கத்தினர் உள்ளிட்ட அமைப்பினர் திரண்டு, வடமாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் அமைதிப்படுத்தினர். தமிழ்நாட்டுத் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறுஅமைப்பினர் நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மேலும், தொடர்புடைய நிறுவனத்துக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டது. திருப்பூரில், தமிழ்நாட்டு இளைஞர்களை வடமாநிலத்தவர்கள் ஓட, ஓட விரட்டி தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக தெரியவருவது: சிகரெட் புகைத்தது தொடர்பாக, அனுப்பர்பாளையம் பகுதியில், தேநீர் கடையில் நின்று கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், வடமாநில இளைஞர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, திருப்பூரைச் சேர்ந்த இளைஞர்கள், வடமாநில இளைஞர்கள் பணிபுரியும் பனியன் நிறுவனத்திற்கு சென்றதாகவும் அங்கு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது, வடமாநிலத்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து, பெல்ட், மரக்கிளைகள் உள்ளிட்டவற்றுடன் திருப்பூர் இளைஞர்களை துரத்தி தாக்குதல் நடத்துவது போன்ற கணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நிகழ்வு தொடர்பாக முழுமையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்துவது தமிழ்நாடு அரசின் முதன்மைக் கடமையென்றும், வடமாநிலத்தவரின் அடாவடிகள், அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என வேல்முருகன் எச்சரித்துள்ளார். மேலும், இது தமிழ்நாடா அல்லது வட மாநிலமா என ஐயம் எழும் வகையில் நடக்கும் நிகழ்வுகள் அமைந்திருப்பதாக வேதனை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குவிகின்றனர். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புச்சாரப் பணிகளிலும், பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள். வெளியார் வெள்ளம் இதே அளவுக்குத் தமிழ்நாட்டில் அன்றாடம் புகுந்தால், பின்னர் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. ஹிந்திக்காரர்களின் மாநிலமாகவோ, கலப்பின மண்டலமாகவோ மாறிவிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. நாகலாந்து, அருணாச்சலபிரதேசம், மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில், வெளிமாநிலத்தவர்கள் சென்று தங்க, அம்மாநிலங்களின் உள் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இந்த சட்டம் தமிழ்நாட்டிற்கும் வேண்டும் என்கிறோம். இது ஒரு புறமிருக்க, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது. இது தமிழ்நாடா அல்லது வடமாநிலமா என்ற ஐயத்தை எழுப்புகிறது. தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, வட மாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது தாக்குல் நடத்தியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து, எதிர் தாக்குதல் நடத்தினால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் என்பதை கவனத்தில் கொண்டு, குற்றச்செயலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை கைது செய்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மேலும், அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 9 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு இலட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில், தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் முயற்சி என்பதோடு, ஹிந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைத்து, தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும். இந்த பாஜக, ஆர்.எஸ்.எஸ் போன்ற மனித குல விரோத கும்பலின் சதித்திட்டங்களைப் புரிந்து கொண்டு, வடமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டைகளை திரும்ப பெற வேண்டும். எதிர் வரும் காலத்திலும், அவ்வாறு தரக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,507.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.