வம்பு வாதங்களால் ஆதாயம் ஒன்றும் இல்லை. தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோமே என்று யாரும் துணிச்சல் காட்ட வேண்டாம். திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக இருங்கள். என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. 17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: மாநிலக்கட்சிகளை அடக்கி ஆள்வதற்கு, அரசு இயந்திரங்களை ஒன்றிய பாஜக அரசு- விசாரணை, வழக்குகள் என்ற தலைப்பில்- முடுக்கி விட்டிருப்பதை மேற்கு வங்கத்திலும் மகாராட்டிரத்திலும் காண முடிகிறது. திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரும், சிவசேனா பாராளுமன்ற உறுப்பினரும் நடைமுறையாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எச்சரிக்கையாக இருக்கும்படி, திமுக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அதனால், அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தை, நடைமுறையாக்கத்துறை முந்தாநாள் கைது செய்துஉள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரிடமும், ஒன்றிய அரசின் நடைமுறையாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜக கட்சிக்கிளையின் தலைவர் அண்ணாமலை ஏற்கனவே, திமுக அமைச்சர்கள் மீது- சும்மா போட்டு வைக்கலாமே என்று, அடிப்படை இல்லாத ஊழல் புகார்களைத் தெரிவித்துள்ளார். ஆளுநரை நேரில் சந்தித்து மனுவும் அளித்து உள்ளார். பதினான்கு ஆண்டுகளுக்கு முந்தைய புகாரில் நடத்தப்பட்ட விசாரணை எல்லாம் தூசு தட்டும் வேலை தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடைமுறையாக்கத்துறை, வருமானவரித்துறை, குற்றப்புலனாய்வுத் துறை, போன்ற ஒன்றிய அரசின் அமைப்புகள், திமுகவை குறிவைத்துள்ளன. எனவே, அரசு ஒப்பந்தங்கள், தனிப்பட்ட சந்திப்புகளின்போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கட்சி கூட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் பாஜகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். தலைமைஅமைச்சர் மோடியை விமர்சிக்கவே வேண்டாம். தூய்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோமே என்று யாரும் துணிச்சல் காட்ட வேண்டாம். வழக்குகளில் சிக்கி விட்டால், அவற்றில் இருந்து மீள்வது கடினம் என, திமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான், சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்க சென்னை வந்த தலைமைஅமைச்சர் மோடிக்கு, திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பாராளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர்- திமுக, பாஜகவுடன் கூட்டணி என்ற தலைப்பு பேசுபொருளாகும் அளவிற்கு மோடியிடம் நெருக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,328.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.