Show all

சஞ்சய் ராவுத்!

தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன் என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார் சஞ்சய் ராவுத்

16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: சிவசேனா கட்சி இரண்டாக உடைக்கப்பட்ட பிறகு அதன் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவுத் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். 

சஞ்சய் ராவுத் மனைவிக்கு மும்பை கோரேகாவ் பத்ரா சாலில் உள்ள பழைய வீடுகளை இடித்துவிட்டு அதனை புதிதாகக் கட்டுவதில் முறைகேடு நடந்ததாக நடைமுறையாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதில் 1,034 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக சஞ்சய் ராவுத்தின் உறவினர் பிரவின் ராவுத் நடைமுறையாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சஞ்சய் ராவுத் மனைவி வர்சாவுக்குச் சொந்தமான 11.15 கோடி மதிப்புள்ள வீட்டை நடைமுறையாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மும்பை தாதரில் உள்ள வீடு, மகாராஷ்டிராவின் அலிபாக் கடற்கரை பகுதியில் உள்ள நிலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளாகும். 

அத்துடன் கடந்த மாதம் இதே நாளில், சஞ்சய் ராவுத்திடம் 10 மணி நேரம் நடைமுறையாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் நிறைவு அடையாத நடைமுறையாக்கப்  பிரிவு அதிகாரிகள் மீண்டும் இரண்டு முறை விசாரணைக்கு அணியமாகும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் சஞ்சய் ராவுத் விசாரணைக்கு அணியமாகவில்லை. 

இதையடுத்து நடைமுறையாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலை மும்பை பாண்டூப் பகுதியில் உள்ள சஞ்சய் ராவுத் இல்லத்தில் சோதனை நடத்தினர். பாதுகாப்புக்கு ஒன்றிய தொழில் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் வந்திருந்தனர். சிவசேனா தொண்டர்கள் பெருமளவு கூடி நடைமுறையாக்கப் பிரிவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தனக்கு இந்த நில மோசடியில் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார் சஞ்சய் ராவுத். இது ஒன்றிய பாஜக அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கீச்சுவில் வெளியிட்டுள்ள செய்தியில், 'தவறான நடவடிக்கை. போலியான ஆதாரம். சிவசேனாவை விட்டு விலகமாட்டேன். நான் செத்தாலும் சரணடையமாட்டேன். இந்த ஊழலில் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது. சிவசேனாவிற்காக தொடர்ந்து போராடுவேன்' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளாகவே ஒன்றியத்தில் ஆளும்கட்சிகள் மாநிலத்தில் ஆளும் மாற்றுக்கட்சிகளை முறியடிப்பதற்கு எடுக்கும் ஒரே ஆயுதம் வழக்கு என்றாகி விட்டது. 

இந்த வகைக்கு திமுகவை காங்கிரஸ் மிகச் சிறப்பாகவே பந்தாடி, திமுகவை தங்கள் நிரந்தர அடிமையாக வைத்துக்கொண்டிருந்தது. காங்கிரசுக்கு ஆட்சி இல்லாத நிலையிலும் ஆட்சிக்கு இனி வாய்ப்பே இல்லை என்பதான நிலையிலும், திமுகவின் கை ஓங்கியிருக்கிறது.

எடப்பாடியையும், பன்னீரையும் இன்றுவரை தங்கள் கட்சிக்கான சிறந்த அடிமைகளாக பாஜக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடிகிறது. 

ஒரே நேரத்தில், மேற்கு வங்காள மாற்றுக்கட்சி அரசையும், மகாராஷ்டிர மாற்றுக் கட்சியையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது பாஜக. இதற்கெல்லாம் காரணம் ஒன்றிய ஆட்சியைப் பிடிக்கிற கட்சிக்கு வானளாவிய அதிகாரம் கிடைத்து விடுவதுதான். 

இந்தியாவில் மாநிலத்தை ஆளுகிற கட்சிகளிடம்- ஒன்றியத்தில் குவிக்கப்பட்டிருக்கிற, மேலும் மேலும் குவித்துக் கொள்ளப்படுகிற அதிகாரத்திற்கு எதிரான விழிப்புணர்வோ, ஒற்றுமையோ இல்லாத காரணம் பற்றி- ஹிந்தியைத் தாய்மொழியாக கொண்ட, ஆதிக்கவாத தலைவர்களிடம் நாடு சிக்கி அல்லல் பட்டு வருகிறது. 

இந்தியாவில் ஊழல் நீக்கமற எல்லா இடங்களிலும் இருந்தாலும் அதிகாரம் கூடுதலாக உள்ளவர்கள் மட்டுமே வழக்கில் சிக்காமல் ஊழலை உடைமை ஆக்கி வாழ்கின்றனர். வழக்கில் சிக்காதவன் பாடும் தேவலாம்தாம். ஆனால் வழக்கில் சிக்கியவன் செத்தான் என்கிற வகைக்கே இந்தியாவின் சட்டம் ஆதிக்கவாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டு வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.