ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச்
சென்ற நடுவண் நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்பேசி சிக்னல் கிடைக்காததால்,
மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. எண்ணிம
இந்தியா திட்டம் குறித்து மத்தியில் ஆளும் அரசு பெருமை பேசி வரும் நிலையில், அந்தக்
கனவு எந்த அளவுக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைச்சர்
நேரடியாகவே உணர்ந்திருப்பார் என்று இந்த புகைப்படத்துக்கு விமரிசனம் முன் வைக்கப்படுகிறது. தனது
நாடாளுமன்றத் தொகுதியின பிகானீர் சென்று தொகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட அமைச்சர்
அர்ஜூன் மேக்வால், குறைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்த அரசு அதிகாரிகளை
செல்பேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார். செல்பேசி
அழைப்புகளைச் செய்ய முடியாமல் திணறிய அமைச்சருக்கு பொதுமக்களே ஒரு உபாயமும் சொன்னார்கள்.
அதாவது, எப்போதுமே செல்பேசி சிக்னல் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், ஆங்காங்கே
இருக்கும் மரங்களில் மீது ஏறிதான் செல்பேசியில் பேசுவதாகவும் கூறி, மரத்தின் மீது ஏறி
பேசுமாறு ஆலோசனை வழங்கினர். மக்கள்
கூறிய யோசனையை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சற்று நேரம் திகைத்த அமைச்சர், மரத்தின்
மீது ஏறவும் முயற்சித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனடியாக மரத்தின் மீது ஏணி
போடப்பட்டது. அதன் மீது ஏறிய அமைச்சர் அங்கிருந்து அரசு அதிகாரிகளுக்கு செல்பேசியில்
பேசினார். பிறகு
அவர் கீழே இறங்கி வந்ததும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்தப் புகைப்படங்களும்
காணொளியும் சமூக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.