Show all

ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம்

ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள டாடா குழுமம் நடுவண் அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க நடுவண் அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.

     பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்திய உள்நாட்டு விமான சேவையில் 35 விழுக்காடு அளவிற்கு பங்களிப்பு அளித்து வந்த ஏர் இந்தியா தற்போது 14 விழுக்காடு அளவிற்கு மட்டுமே பங்களிப்பை அளித்து வருகிறது.

     கடந்த பத்து ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு ஆண்டில் கூட லாபத்தை பார்க்கவில்லை. மேலும் ஏர் இந்தியாவை தொடர்ந்து இயக்க ஆண்டுதோறும் நடுவண் அரசு குறிப்பிட்ட அளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளதாம்.

     இந்தத் தொகையை வேறு திட்டங்களுக்கு செலவிட்டாலும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறும் நடுவண் அரசு ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் திட்டத்தில் உள்ளது.      இந்நிலையில் தற்போது ஏர் - இந்தியா நிறுவனத்தைக் கையகப்படுத்தும் வகையில் அதன் 51 விழுக்காடு பங்குகளை வாங்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

     சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் - இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் நடுவண் அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

     நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை வாங்கி சாதிக்கப் போகிறதா டாட குழுமம்! தனியார் நிறுவனத்தின் சாதனைக்காக நட்டக் கணக்கு காட்டுகிறதா மோடி அரசு? என்பது போக போகத்தான் தெரியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.