இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த சுந்தர் பிச்சை, ஹிந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களவையில் முழங்கிய, கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் 12,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஹிந்தி மொழியைப் போல தமிழ், மலையாளம், கன்னடத்தில் பாடங்களைப் படித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்மாநிலங்களுக்கு வரவே முடியாது என கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மக்களவையில் சுட்டிக்காட்டினார். ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக ராஜ்யசபாவில் பேசுகையில் ஜான் பிரிட்டாஸ் இதனைத் தெரிவித்தார். ஆட்சி மொழி தொடர்பான ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் அறிக்கை அளித்தது. ஹிந்தி மொழி திணிப்புக்கு பரிந்துரைகளை வழங்கி இருந்தது இந்த அறிக்கை. நாடு முழுவதும் இது பெரும் சர்ச்சையானது. குறிப்பாக ஹிந்தி பேசாத மாநிலங்கள் இந்தப் பரிந்துரைகளை கடுமையாக எதிர்த்தன. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இப்பரிந்துரைகளைக் கண்டித்து ஒன்றிய அரசுக்கு மடல்கள் எழுதி இருந்தனர். இது தொடர்பாக மக்களவையில் ஜான் பிரிட்டாஸ் பாரளுமன்ற உறுப்பினர் பேசியதாவது: நாட்டின் அதிகாரப்பாட்டு அலுவல் மொழியாக ஹிந்தியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவிடம் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவானது பரிந்துரைகள் வழங்கியது. அதில் ஹிந்தி பேசும் மாநிலங்களின் ஒன்றியப் பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழியாக ஹிந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த சுந்தர் பிச்சை, ஹிந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். தென்னிந்தியாவில் வட இந்திய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இன்று படித்துக் கொண்டிருக்கின்றனர். வட இந்திய மாணவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் அல்லது கன்னடத்தில்தான் பாடங்களைப் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அப்படி கட்டாயப்படுத்தினால் வட இந்திய மாணவர்கள் தென்னிந்தியாவுக்கு வர முடியாது. வட இந்தியாவுக்குதான் திரும்பி செல்ல வேண்டும். ஹிந்தி மொழியைத் திணிக்கிற எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் கூறியிருந்தார். அத்துடன் தமது கீச்சுப் பக்கத்தில் தமது பேச்சை தமிழில் பதிவிட்டிருந்தார் ஜான் பிரிட்டார்ஸ். அந்தக் கீச்சுப் பதிவில், 'ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்து விடும். இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமைப் பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா? என பதிவிட்டிருந்தார். ஜான் பிரிட்டாஸின் இந்தக் கீச்சுப் பதிவு சமூக வலைதளங்களில் பேரளவாக விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது. இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று மேற்கோள்காட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அப்பதிவில், தாய்மொழி எமது பிறப்புரிமை. பிறமொழிகளைப் பயில்வதும் பயன்படுத்துவதும் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில்தான் நிகழும். 75 ஆண்டுகளாக இதுதான் தென்னிந்தியாவின் உரிமைக்குரல். வடகிழக்கும் இதையே பிரதிபலிக்கும். ஹிந்தியை வளர்க்க, அதை பிறர் மேல் திணிப்பது அறிவீனம். திணிக்கப்படுபவை எதிர்க்கப்படும். இதையே கேரளமும் பிரதிபலிக்கின்றது என்பது பாதி இந்தியாவிற்கான சோற்றுப் பதம். பொங்கல் வருகிறது எச்சரிக்கை. ஓ! பொறுத்தருள்க உங்களுக்குப் புரிவதற்காக 'ஜாக்த்தே ரஹோ' என சுட்டிக்காட்டி கிண்டலடித்திருந்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,475.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.