Show all

பாஜக அரசு சட்டவிரோதமாக உளவு பார்த்திருக்கிறது! புலனச் செயலி நிறுவனத்தின் வழக்கோடு பொருத்தி, காங்கிரஸ் குற்றச்சாட்டு

புலனம் நிறுவன வழக்கு தொடர்பாக, அதன் செய்தி தொடர்பாளர்- ‘இந்தியாவில் உள்ள இதழியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர், தங்கள் புலனச்செயலி வழியாக, இஸ்ரேல் நிறுவன சட்டவிரோத உளவுநிரல் மூலம், கண்காணிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் பிரியங்கா காந்தியின் புலனம்செயலியையும் சட்ட விரோத உளவுநிரல் தாக்கியுள்ளது என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக செல்பேசிகளை ஊடுருவல் செய்ய சட்டவிரோத உளவுநிரல் பயன்படுத்தப்பட்டது என்பதை ஆவணங்கள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தும் செயலி புலனம் (Whatsapp). சேதி, அரட்டை, காணொளி அழைப்பு, குழுசேதி என வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து சேவை வழங்குவதால் புலனம் செயலியின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரித்தது. எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்த புலனத்தில் குறும்பர்களின் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிவந்தது.

புலனம் மூலம் மிடுக்குப் பேசிகளில் குறும்பர்களின் ஊடுருவல் இருக்கிறது. உடனடியாக புலனம் செயலியை மேம்படுத்தல் செய்யுங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது புலனம். இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் என்எஸ்ஓ என்ற நிறுவனத்தின் பெகாசஸ் என்ற உளவுநிரல் மூலம் புலனம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ அறங்கூற்றுமன்றத்தில் இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக புலனம் வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனத்தின் உளவுநிரல் மூலம் 1400-க்கும் மேற்பட்ட பயனாளர்களை புலனம் மூலம் கண்காணித்ததாக குற்றம்சாட்டியது புலனம் நிறுவனம்.

இதுகுறித்து பேசிய புலனம் நிறுவன செய்தி தொடர்பாளர், இந்த 1400 பேரில் இந்தியாவில் உள்ள இதழியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர், உளவுநிரல் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர் அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றார். இந்நிலையில் பிரியங்கா காந்தியின் புலனம்செயலியையும் உளவுநிரல் தாக்கியுள்ளது என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், பிரியங்கா காந்தியின் புலனம்செயலியையும் உளவுநிரல் தாக்கியுள்ளது. இதழியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரின் புலனத் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து, பாஜக அரசு சட்டவிரோதமாக உளவு பார்த்திருக்கிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல், இந்தியப் பாதுகாப்புக்கும் எதிரானது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக செல்பேசிகளை ஊடுருவல் செய்ய சட்டவிரோத உளவுநிரல் பயன்படுத்தப்பட்டது ஆவணங்கள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். பாஜக அரசு இதைப்பற்றி முழுமையாக அறிந்திருக்கிறது. பாஜக அரசுக்கு மக்கள் புதிய பெயர் வைக்கத் தொடங்கியுள்ளனர். அது பாரதிய உளவாளி கட்சி என்பதாகும். இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,325.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.