உயர்மதிப்பு ரூபாய்
தாள்கள் செல்லாது என மோடி அரசு அறிவித்தது, பேரழிவை ஏற்படுத்திவிட்டது என காங்கிரஸ் செயற்குழு
கூட்டத்தில் சோனியா காந்தி ஆவேசமாக பேசினார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில்
நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்கள்
குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் குடியரசுதலைவர் தேர்தல், துணை
குடியரசுதலைவர் தேர்தல், காங்கிரஸ் கட்சியின் அமைப்புத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக
தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மத்தியில் மோடி அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகள் முடிந்திருக்கிறது.
நாட்டில் நல்லிணக்கம் இருக்கிறதா? மாறாக, குழப்பம் இருக்கிறது; பேதம் உள்ளது. சகிப்புத்தன்மை
எங்கே போனது? காஷ்மீரில் மோதல்கள் அதிகரித்துள்ளன. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பிற ஒடுக்கப்பட்ட
மக்கள் ஆபத்தான நிலையை சந்தித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரமும், பல்வேறுதரப்பட்ட
கோட்பாடுகளைக் கொண்ட, மதங்களை பின்பற்றி வருகிற மக்களின் உணவுப்பழக்க வழக்கம் பாதிப்புக்குள்ளாகி
உள்ளது. அரசியல்வாதிகளா, அமைப்புகளா, மனித சமூகமா, ஊடகமா
எல்லாவற்றிலும் சகிப்புத்தன்மை தளர்கிறது. அடித்துக்கொல்லப்படுகிற சம்பவங்கள் அதிகரித்து
வருவது கவலை அளிக்கிறது. சேவகர்களும், ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான தனி
நபர்களும் கடந்த 3 ஆண்டுகளில் தங்களின் செல்வத்திலும், செல்வாக்கிலும் ஆச்சரியப்படத்தக்க
அளவில் பெருகி இருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி இருக்கிறார்கள்.
நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கிறார்கள். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், இந்த அரசின்
மகத்தான தோல்வியைக் காட்டுவதாக உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகரித்துக் கொண்டிருப்பதை
பார்க்கிறோம். நடுவண், மாநில அரசுகளின் உணர்ச்சியற்ற கையாளுதல், காஷ்மீர் மக்களை, குறிப்பாக
இளைஞர்களைத் திட்டமிட்டு அன்னியப்படுத்தி, விரோதித்துக்கொண்டிருக்கிறது. படை வீரர்களும், அப்பாவி மக்களும் தங்கள் உயிர்களை
இழக்கின்றனர். படுகாயம் அடைகின்றனர். இளைஞர்களோ கண்மூடித்தனமாக இருக்கிறார்கள். அங்கு
அரசு தனது குறைபாடுடைய அணுகுமுறையை சரி செய்ய வேண்டும். மக்களுடைய நம்பிக்கையை மீட்பதற்கு,
சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும். உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களைச் செல்லாது
என அறிவித்ததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்று டாக்டர் மன்மோகன் சிங்
கணித்தார். இதை அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள வளர்ச்சி புள்ளி விவரங்கள் நிரூபணம்
செய்கின்றன. செல்லாது என அறிவிக்கப்பட்ட பணம் உண்மையிலேயே
வங்கிகளுக்கு திரும்பி இருப்பது எவ்வளவு என்பதை இன்று வரை அரசு தெரிவிக்க மறுத்துக்கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.உயர்
மதிப்பு கொண்ட ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட திட்டம் மட்டுமல்ல, இந்தியாவில்
தயாரிப்போம் என்று அறிவித்த திட்டமும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், முதலீடுகளைப்
பெறவும் தவறிவிட்டது. அடுத்த சில வாரங்களில் நமது நாட்டின் குடியரசுதலைவர்
, துணை குடியரசுதலைவர் ஆகியோரை நாம் தேர்ந்தெடுக்கப்போகிறோம். இத்தகைய தருணத்தில்,
இந்த உயர்வான பதவியில் அமருகிறவர்கள், நமது அரசியல் சாசனத்தை காக்கிறவர்களாக இருக்க
வேண்டும். டாக்டர் மன்மோகன் சிங், ராகுல் உள்ளிட்ட தலைவர்களும்,
நானும் இந்த உயர்ந்த பதவிகளுக்கு எல்லோராலும் ஏற்கப்படுகிற பொது வேட்பாளரை கண்டறிய
ஒத்த கருத்துடைய தலைவர்களை சந்தித்து பேசி இருக்கிறோம். இதை முன்னெடுத்துச் செல்வதற்கு
பிரதிநிதிகள் அடங்கிய துணைக்குழுவை ஏற்படுத்தி உள்ளோம். 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் வெகுதொலைவில்
நாம் இல்லை. நாம் இந்தியாவின் சாரத்தையும், எண்ணத்தையும் காப்பதற்கு தயார் ஆக வேண்டும்.
இதற்காக நாம் நமது கட்சி அமைப்பை பலப்படுத்த வேண்டும். நடந்து கொண்டிருக்கிற அமைப்புத்
தேர்தல்கள் வேகமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.