ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் 23 அகவை இளைஞர் பல பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 300 பெண்கள் அந்த இளைஞரால் ஏமாற்றப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரசாந்த் ரெட்டி, ராஜா ரெட்டி மற்றும் டோனி என வெவ்வேறு பெயர்களில் பிரசன்ன குமார் சமூகவலைதளத்தில் வலம் வந்துள்ளார். இவர் பெண்களை காதலிப்பது போல் நடித்து, அவர்களிடம் நகை, பணம் உள்ளிட்டவற்றை பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த இளைஞரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, வரதட்சனை கேட்டு குடும்ப வன்முறை, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் என நாளுக்கு நாள் இந்தவகைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் 23 அகவை இளைஞர் பல பெண்களை ஏமாற்றி அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார் என்பதுதான் அது. கிட்டத்தட்ட 300 பெண்கள் அந்த இளைஞரால் ஏமாற்றப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கடப்பா மாவட்டம் பிராட்டாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னகுமார் தொழில்நுட்ப இளவல் (பிடெக்) படிப்பை பாதியில் கைவிட்டவர் என்று சொல்லப்படுகிறது. நிரந்தர வேலை எதுவும் இல்லாத பிரசன்னகுமார் பெண்களுக்கு காதல் வலை விரித்து சமூக வலைதளத்தில் பொழுதை போக்கி வந்துள்ளார். இவர் விரித்த வலையில், ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்டோர் சிக்கியதான அதிர்ச்சித் தகவலை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் ஒவ்வொருவராக பட்டியலிட்டு காதலிப்பது போல் நடித்து, ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார். இப்படிப் பல பெண்களுடன் இயங்கலை வழியாகவே பழகி அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நேரடியாகப் பழகி அவர்களுடன் பலவகையாகப் புகைப்படங்களை எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டி அவர்களிடம் நகை பணம் பறிப்பது இவருடைய வேலையாக இருந்து வந்துள்ளது. சந்தேக வழக்கில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில், இவர் மேற்கண்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், அவரை துருவித் துருவி விசாரித்ததில் அவர் பல விடையங்களை கக்கியுள்ளார். வெளியில் தெரிந்தால் அவமானம் என கருதி பல பெண்கள் புகார் கூறவில்லை என்றும், ஆனால் விசாரணையில் பிரசன்னகுமார், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரசன்னகுமாரின் செல்பேசியை பறித்து ஆராய்ந்ததில், அதில் ஏராளமான ஆபாச காணெளிகள் இருந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி பறிப்பு குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.