உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சரயு ஆற்றங்கரையில் இராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அயோத்தியில் 450 கோடி ரூபாய் செலவில் 725 அடி உயர இராமர் சிலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலைக்கு முன்னர், இந்தியாவில் மொத்தம் 562 இந்திய மன்னராட்சி அரசுகள் அல்லது சமஸ்தானங்கள் காணப்பட்டன. இவை பிரித்தானிய இந்திய அரசின் ஆளுகைக்கு உட்படாதவை ஆகும். இருப்பினும் இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி தத்தம் பகுதிகளை ஆண்டு வந்தன. இந்திய விடுதலைக்கு பின்னர், இந்த 562 இந்திய மன்னராட்சி அரசுகளை இந்திய இராணுவத் துணையோடு உருட்டி மிரட்டி இந்தியாவுடன் இணைத்தது வல்லபாய் படேலின் இந்திய சர்வாதிகாரப்பாடு. அந்த காலக்கட்டத்தில் வல்லபாய் படேலின் அந்த சர்வாதிகாரப்பாடு சரியாகவே இருந்திருக்கலாம். ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் குடிஅரசு ஆக்கப்பட்ட இந்தியாவில்- அட்டவணை எட்டில் இந்திய ஆட்சி மொழிகளாக 22 மொழிகளை அங்கீகரித்துள்ள இந்தியாவில்- மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் பட்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகிற இந்தியாவில்- அந்தக் காலக்கட்ட சர்வாதிகாரத்தைத் கொண்டாடுவதோ தூக்கிப் பிடிப்பதோ வக்கிரமான செயலாகும். படேலின் அந்த சர்வாதிகாரப்பட்டை ஒருமைப்பாடு என்று காட்ட முனைந்து, படேலுக்கு வானளாவ சிலை எழுப்பி அதற்கு ஒற்றுமை சிலை என்று பெயர் வைத்தது இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற பாஜக இந்திய அரசு. அந்த ஒற்றுமைப்பாடு எந்தத் தலைப்பில் என்று காட்டுவதற்காக: அயோத்தியில் 725 அடி உயர ராமர் சிலை: ரூ 450 கோடிக்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல் என்கிற செய்தி வெளியாகியிருக்கிறது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சரயு ஆற்றங்கரையில் இராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அயோத்தியில் 450 கோடி ரூபாய் செலவில் 725 அடி உயர இராமர் சிலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது பற்றி மாநில முதன்மை செயலர் அவானிஷ் அவாஸ்தி கூறியதாவது: அயோத்தியில் சரயு ஆற்றங்கரையை மேம் படுத்தும் வகையில் ‘இராம் நகரி அயோத்தியா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் 447.46 கோடி ரூபாய் ஒதுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை வைத்து சரயு ஆற்றங்கரையில் 61.38 ஹெக்டேர் நிலம் வாங்குவது 725 அடி உயரத்தில் இராமருக்கு சிலை வைப்பது அயோத்தியை அழகுப்படுத்தும் பணி ஆகியவை மேற்கொள்ளப்படும். அத்துடன் எண்ணிம அருங்காட்சியகம் நூலகம் வாகன நிறுத்தம் உணவகம் பூங்கா உட்பட பல வசதிகளும் ஏற்படுத்தப்படும். இராமர் சிலை 495 அடி உயரம் கொண்டதாக இருக்கும். சிலைக்கு மேல் 65 அடி உயர குடையும் அமைக்கப்படும். சிலை 165 அடி உயரம் உடைய பீடத்தில் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்தச் சிலை அமைப்பு முடிக்கப்படும் போது இதுவே உலகின் மிக உயரச்சிலையாக அமையும். தற்போது உலகின் மிக உயரச்சிலையாக இருக்கிற படேலின் சிலை 182 மீட்டர். அமைக்கபட விருக்கிற இராமர் சிலையின் உயரமோ 220 மீட்டர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,325.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.