Show all

விரைவில்! அனைத்து செல்பேசி நிறுவனங்களும் தங்கள் தரவுக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றனவாம்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச அறங்கூற்றுமன்றத்  தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. என்று புலம்பும் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்- செல்பேசி தரவுக் கட்டணத்தை உயர்த்தப் போகின்றனவாம். 


04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் தொலைத்தொடர்புத் துறையில் சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் போல நிறைய நிறுவனங்கள் இலாபம் பார்த்து வந்தன. திடீரெனப் பல்லவர்கள் போல படையெடுத்த ஜியோவால் எல்லா நிறுவனங்களின் ஆட்சியும் ஆட்டங்காணத் தொடங்கின.

பல குறுநில மன்னர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். பாண்டியன் போல ஏர்செல் நிறுவனம் வரலாறு தொலைத்தது. பல்லவர்கள் ஜியோவோ- சோழமன்னர்கள் போன்ற ஏர்டெல்லோடும், சேரமன்னர்கள் போன்ற வோடா மற்றும் ஐடியாவின் பல்லைத்தட்டி பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தது. 

கடந்த  பல ஆண்டுகளாகவே இந்திய அரசு, என்னையும் விளையாட்டிற்கு சேர்த்துக் கொண்டு உங்களுடைய இலாபத்தில் பத்து விழுக்காட்டை எங்களுக்கு கொடு. கொடுக்காவிட்டால் பல்லாங்குழியும் வேண்டாம் பாண்டியும் வேண்டாம். விளையாட்டைக் கலைத்து விடுவோம். அப்புறம் குலைகுலையா முந்திரிக்கா கொள்ளையடிச்சவன் ஜியோக்கா என்று நீங்கள் ஓட வேண்டியதுதான் என்றது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையே பஞ்சாயத்து பேசிய அறங்கூற்றுமன்றமும், இந்திய அரசை விளையாட்டில் சேர்த்துக் கொண்டு உரிமத் தொகை கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி விட்டது.

தற்போது தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு உள்ள முதன்மை நெருக்கடி என்னவென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு பத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளாகவே அரசாங்கம் மற்றும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு இடையே சுமூக நிலை ஏற்படவில்லை.

ஆனால், அண்மையில் அரசாங்கத்திற்கு சாதகமாக உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 900 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புலம்புகின்றன.

இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள இந்திய அரசு வாய்ப்பு அளித்துள்ளதாகத் தெரிகிறது. வழக்கமாக எந்தச்சுமையையும் இறுதியாக தாங்குகிற பொறுப்பை எடுத்துக் கொள்கிற மக்களை அணியப்படுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், செல்பேசி தரவுகளின் விலை உயரப் போகிறது என்கிற சிவப்பு சைகை விளக்குகளை ஏற்றியுள்ளன. இனி போக்குவரத்து நெருக்கடியை மக்கள் சமாளித்து பயணிப்பார்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,342.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.