செந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரே, நொந்து கொள்ளும் வகைக்கு, பதினைந்தாயிரம் கோடியை விழுங்கிய சாலை பள்ளமும் மேடும் ஆகியுள்ளது ஐந்து நாள் மழைக்கே. சாலை விழுங்கிய பதினைந்தாயிரம் கோடியில் ஆங்காங்கே வெற்றிடத் துளைகள் ஏற்படும் வகைக்கு சில கோடிகளை விழுங்கியவர்கள் யாரெல்லாம் என்று கேள்விகள் வரிசை கட்டுகின்றன. 07,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தரப் பிரதேசத்தில் தலைமைஅமைச்சர் மோடியால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நான்கு வழி விரைவுச்சாலை மழைக்கு தாங்காமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச விரைவுச்சாலை தொழில் வளர்ச்சி ஆணையம் சார்பில் இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. 28 மாதங்கள் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சுமார் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ நீளத்தில் இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை அண்மையில் தான் தலைமைஅமைச்சர் மோடி திறந்துவைத்தார். இந்தச் சாலை ஐந்து நாட்கள் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இது குறித்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, ரூ.15,000 கோடிகள் செலவில் கட்டப்பட்ட விரைவுச் சாலை 5 நாள் மழைக்குக் கூட தாங்காது என்றால், அதன் தரத்தைப் பற்றிய கவலைக்குரிய கேள்விகள் எழுகின்றன என்று நொந்து கொண்டுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் தலைவர், பொறியாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பாணை அனுப்பி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஹிந்தியில் கீச்சுப்பதிவிட்டுள்ளார். துறை சார்ந்த அமைச்சர்களையும் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள் வருண்காந்தி என்கிற இணைய ஆர்வலர்களின் பதிவும் உடன் இணைந்து இணையத்தில் தீயாகி வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,318.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.