தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு உழவர் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு உழவர் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் விஜயா ரெட்டி என்ற அந்த பெண் வட்டாட்சியர் உயிரிழந்தார். ரங்காரெட்டி மாவட்டம், அப்துல்லாபுர் மெட் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை தீயிட்டுக் கொளுத்தியவர்- அதே மாவட்டத்தைச் சேர்ந்த கோரெல்லி கிராமத்தைச் சேர்ந்த உழவர் சுரேஷ் என்பவர் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பகல் உணவு இடைவேளையின் போது, விஜயா ரெட்டி அலரும் சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளார் என்றும், கொளுத்தியவர் உழவர் சுரேஷ் எனவும தெரியவந்தது என்று அலுவலக அறைக்கு வெளியே இருந்தவர்கள் கூறினர். இந்த விபத்தில் வட்டாட்சியரின் ஓட்டுநர் உட்பட இரண்டு பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்கள் ஹயத் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சுரேஷின் நிலம் தொடர்பான வழக்கு ஒன்று நடைபெற்றுவருவதாகவும், நிலம் தொடர்பான பிரச்சனைக்காக வட்டாட்சியரை சுரேஷ் சந்திக்க வந்ததாகவும் அறிய முடிகிறது. இந்த விவகாரம் குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், முழு விவரங்கள் விரைவில் தெரியும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பணியிடத்தில் வட்டாட்சியர் உயிருடன் எரிக்கப்பட்டது மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது, மேலும் சக ஊழியர் பணியின்போது இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வட்டாட்சியர்கள் சங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்துல்லாபுர்மெட் வட்டாட்சியர் விஜயா ரெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெலுங்கானா துணை மாவட்ட ஆட்சியர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் வி.லச்சி ரெட்டி மற்றும் தெலுங்கானா வட்டாட்சியர் சங்க செய்தித் தொடர்பாளர் எஸ்.ராமு கண்டனம் தெரிவித்துள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,327.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.