Show all

குடியரசு தலைவர் தேர்தலில் மீராகுமாரை அறிவித்து நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுத்த எதிர்க்கட்சிகள்

குடியரசு தலைவர் தேர்தலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மீராகுமாரை எதிர்க்கட்சிகள் வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிலையில் நிதீஷ்குமார், மீராகுமாரை ஆதரிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

     முப்படைகளின் தலைவர், ஆளுநர்களை தேர்வு செய்பவர், உச்சஅறங்கூற்று மன்ற தலைமை அறங்கூற்றுவர், அறங்கூற்றுவர்கள் தேர்வு உள்ளிட்ட மிக பெரிய பதவிகளை தேர்வு செய்யும் மிகப் பெரிய பொறுப்பு குடியரசு தலைவருக்குத்தான்.

     அவர் மத்தியில் ஆளும் கட்சியின் ஆலோசனையின் பேரில் செயல்படுபவர் என்றாலும் கூட அவசர நிலை, 356 உள்ளிட்ட முக்கிய அம்சங்களை அவரால் மட்டுமே பயன்படுத்த முடியும். அத்தகைய நாட்டின் உயர் பதவியை வகித்து வரும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதி முடிவடைகிறது.

     பாஜக தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரை எந்தவித எதிர்ப்பும் இன்றி அனைத்து கட்சிகளும் ஆதரித்து போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக கடுமையாக யோசித்து வந்தது. சர்ச்சையில் சிக்காத ஒருவரைதான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தது பாஜக.

     பின்னர் பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக தேர்வு செய்தது. அவர் தலித் சமூகத்தினர் என்பதால் அவரை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கக் கூடும் என்று பிரதமர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் என்பதால் அவருக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

     ராம்நாத் கோவிந்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. அதன் முடிவில் தலித் சமூகத்தை சேர்ந்த மீராகுமாரை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

     ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தினர் என்றாலும் அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர். மேலும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் தேசத்தின் வேற்று கிரகவாசிகள் என கடந்த 2010-ஆம் ஆண்டு அவர் தெரிவித்ததாகவும், இடஒதுக்கீட்டுக்கு வித்திடும் ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரையை ஏற்க மறுத்ததாகவும் ராம்நாத்துக்கு எதிராக ஒரு தகவல் பரவி வருகின்றது.

     பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மீராகுமார் மிகப் பெரிய அரசியல்வாதியாவார். நாட்டின் துணை பிரதமராக இருந்த ஜெகஜீவன்ராமின் மகளாவார். கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற பேரவைத் தலைவராக இருந்தார். முதல் பெண் பேரவைத் தலைவர் என்ற பெருமையை பெற்றார். நாடாளுமன்றத்தில் பாஜக எத்தனை புயலைக் கிளப்பினாலும் தன்னுடைய மெல்லிய குரலினால் அனைவரையும் கட்டுப்படுத்தி அவையை கட்டுக் கோப்பாக செயல்படவைத்தவர்.

     இதுவரை எந்த வித புகாரிலும் சிக்காதவர். அனைத்து கட்சியினரையும் அனுசரித்து செல்லும் குணம் கொண்டவர். கட்சி, ஜாதி, மதம், மொழி பாகுபாடின்றி அனைவருடனும் சகஜமாக பேசக் கூடியவர்.

     ராம்நாத் கோவிந்த் பீகார் ஆளுநராக இருந்ததாலும், அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதாலும் அவரை பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ்குமார்  ஆதரித்தார். தற்போது பீகார் மண்ணின் மைந்தருரான மீராகுமாரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளதால் நிதீஷ்குமாருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இருப்பாரா அல்லது ராம்நாத்துக்கான ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டு மீராகுமாரை ஆதரிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.