Show all

இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே! உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக

தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக, இன்று பதவியேற்கிறார் எஸ்ஏ போப்டே.

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறங்கூற்றுமன்றம் விசாரிக்க தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கிய தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டே பொறுப்பேற்க உள்ளார். தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். வழக்கப்படி உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தான், அடுத்த தலைமை அறங்கூற்றுவரைப் பரிந்துரை செய்ய வேண்டும்.

தலைமை அறங்கூற்றுவராக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தபோது, அந்தப் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு எஸ்.ஏ.போப்டே தலைமை வகித்தார். இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அந்தக் குழு, புகாரை விசாரித்து, ரஞ்சன் கோகோய்க்கு நற்சான்று வழங்கியது.

உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் பதவிக்கு அகவை அடிப்படையில் இந்தப் பரிந்துரை செய்யப்பட வேண்டும். அதன்படி தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டேவை பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறங்கூற்றுவர் எஸ்.ஏ.போப்டே நியமனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

எஸ்.ஏ.போப்டே, உச்ச அறங்கூற்றுமன்றத்தின் 47வது தலைமை அறங்கூற்றுவராக இன்று காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். இவரின் பதவிக்காலம் பதினேழு மாதங்களாம். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

‘அரசு எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பது ஒரு சொலவடை. அதை முன்னெடுப்பது அறங்கூற்று மன்றங்கள். நல்ல அரசில் அறங்கூற்று மன்றங்கள் விரைந்து செயல்பட்டால், மக்களுக்கு நல்லது உடனடியாகச் சென்று சேரும். தீய அரசில் அறங்கூற்று மன்றங்கள் கொஞ்சம் மந்தமாக செயல்பட்டால், மக்களுக்கு தீமை சென்று சேரும் காலதாமதத்தில் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,340.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.