தமிழ்நாட்டின் குரலுக்கு, காதுகேளாத மாற்றுத் திறனாளியாக, ஒன்றிய பாஜக அரசு, இந்த ஆண்டும் நீட் தேர்வை வழக்கம் போல நடத்தி முடித்துள்ளது. 05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவின் நிலை என்ன? என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசிடம் வினா எழுப்பியிருந்தார். அதற்கு- நீட் விலக்கு சட்டவரைவு கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது, என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று சொல்லி காலம் கடத்தவும் கூடாது. ஆளுநர் கடத்திய காலமே அதிகம். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பது தமிழ்நாட்டின் குரல். அது வெல்லும். வெல்லும் வரை நம் முயற்சிகளைத் தொடர்வோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். தமிழ்நாட்டின் குரலுக்கு, காதுகேளாத மாற்றுத் திறனாளியாக, ஒன்றிய பாஜக அரசு, இந்த ஆண்டும் நீட் தேர்வை வழக்கம் போல நடத்தி முடித்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு குறித்து ஒன்றிய பாஜக அரசிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அனுப்பியிருக்கிறது. இது குறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்ட வரைவு ஒன்றிய அரசுக்கு ஒப்புதல் கோரி அனுப்பப்பட்டிருக்கிறதா? அதனுடைய தற்போதைய நிலை என்ன? ஒப்புதல் வழி முறையில் என்னென்ன முன்னேற்றங்கள்? என்ன கால வரையறைக்குள் முடிவு எடுக்கப்படும்? என்று கேட்டிருந்தேன். அதற்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அளித்திருக்கும் விடையில்: குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக, மாநில ஆளுநர்கள் அனுப்புகிற சட்ட வரைவுகள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுவது நடைமுறை. அது போன்று ஒன்றிய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் கருத்து கேட்பு தொடங்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய நலங்கு மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தங்களின் கருத்துகளை அளித்துவிட்டன. அவற்றை, தமிழ்நாடு அரசிடம் கடந்த மாதத்தில் பகிர்ந்துகொண்டு கருத்துகளை, விளக்கங்களைக் கேட்டிருக்கிறோம். இது போன்ற சிக்கல்களில் கலந்தாலோசனை நேரம் எடுக்கும். ஒப்புதலுக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒன்றிய அரசு தெரிவித்துள்ள தகவல் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட வினாவிற்கு, நீட் விலக்கு சட்டவரைவு குறித்த ஒன்றிய அரசின் வினாவிற்கு ஓரிரு நாட்களில் விடை அனுப்பப்படும் என்றும், அதற்கான விடைகள் சட்ட வல்லுநர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பரிசீலனைக்காகவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகவும் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட பிரிவுகள் சட்ட வரைவு 2021 உள்துறை அமைச்சகத்துக்கு எண்பது நாட்களுக்கு முன்பு (02.05.2022) வந்து சேர்ந்தது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,316.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.