தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வை (NEET) இந்த ஆண்டில் நடுவண் அரசு கட்டாயமாக்கியது. இதனால்
ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக சென்றுள்ளது. இதனிடையே கடந்த மே 7-ஆம் தேதி நாடு முழுவதும்
நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 18.34 லட்சம் மாணவர்கள் தேர்வு
எழுதினர். தமிழகம் மற்றும் புதுவையில் 88,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 65,000 மருந்தியல் மற்றும் அறுவையியல்
இளவல் (MBBS) இடங்களுக்கும், 23,000 பல்மருத்துவ இளவல் (BDS) இடங்களுக்கும் இந்த தேர்வு
நடத்தப்பட்டது. பிறமொழிகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களில் பாரபட்சம்
இருந்ததாக சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் சூன் 8-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிட தடை
விதித்தார். இதை எதிர்த்து நடுவண் அரசு கல்வி வாரியம்
(CBSE), உச்ச அறங்கூற்று மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர்கள்,
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கினர்.
மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை நடுவண் அரசு கல்வி வாரியமே முடிவு செய்து
கொள்ளலாம் என்றனர். இதைத் தொடர்ந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத்
தேர்வு முடிவுகள் வரும் 26-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள்
வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இன்று
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகளை நடுவண் அரசு கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
Cbseneet.nic.in என்ற இணையதளத்தில்
மாணவர்கள் பார்த்துக் கொள்ளலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.