Show all

இது மாஉயரச்சிலைகளுக்கான தருணம்! ராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் சிவன் சிலை.

இராஜஸ்தானில் 351 அடி உயரத்தில் 2,500 டன் உருக்கு கொண்டு பிரமாண்ட சிவன் சிலை தயாராகி வருகிறது.

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜஸ்தான் மாநிலம் நாதட்வாராவில் உலகின் மிகப் பெரிய சிவன் சிலை உருவாகி வருகிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இராஜஸ்தான் முதலமைச்சர் முன்னிலையில் தொடங்கப்பட்ட இந்தச் சிலையின் பணி இந்த ஆண்டு முடிவடைய உள்ளது.

இச்சிலையை கூர்கானைச் சேர்ந்த நரேஷ் குமார் குமாவட் என்ற பிரபல சிலை வடிவமைப்பாளரின் குழு உருவாக்கி வருகிறது. இந்தச் சிலை 35 மாடிக் கட்டடத்துக்கு இணையானதாம். சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டுமே 260 அடியாம். இருபது அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், மின்உயர்த்தி என பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இச்சிலையானது மிகவும் அமைதியான மற்றும் மகிழ்வான முகபாவம் கொண்ட சிவன் சிலையாக உருவாகி வருகிறது. 750 பணியாளர்கள் மிகவும் சிரத்தையுடன் இச்சிலையை உருவாக்கி வருகிறார்கள்.

இச்சிலைக்கு நம்பிக்கைச் சிலை எனப் பெயரிடப்பட்டுள்ளதாம். இங்கு சிவனுக்கு முன்பாக 35 அடி அகலமும் மற்றும் 27 அடி நீளமும் கொண்ட மிகப் பெரிய நந்தி சிலை ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிவன் சிலையானது 20 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள படேல் சிலை, சீனாவின் புத்தர் சிலை, மியான்மரின் லேகுன் செக்யா இவற்றை அடுத்து உலகின் மிகப் பெரிய சிலையாக ராஜஸ்தான் சிவன் சிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,334.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.