மோடியின் படத்தை வைத்து கருத்துப் படம் உருவாக்கிய
ஏஐபி என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனராம்.
கீச்சு
மற்றும் முகநூலில் ஏஐபி என்ற கருத்துப்படம் உருவாக்கும் பக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சமூக வலைதள பக்கத்தில் திரைப்படம், அரசியல் குறித்த கருத்துப் படங்கள் தொடர்ச்சியாக
பகிரப்பட்டு வருவது வழக்கம். அந்த
ஏஐபி பக்கத்தில் நேற்று மோடியைக் கேலி செய்வது போன்று ஒரு படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பாஜகவைச்
சேர்ந்த கீச்சு பயனாளி ஒருவர் ஏஐபி பக்கம் மோடியைக் கேலிக்குள்ளாக்குவதைக் கண்டித்து
மும்பை காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். மும்பைக்
காவல்துறையினர் அந்த ஏஐபி என்ற சமூக வலைதள பக்கத்தின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தப் பக்கத்தை நடத்துபவர்களின் மீது, அவதூறு வழக்குக்கான தண்டனைச் சட்டம் 500 மற்றும்
இணையதளங்களில் அருவருப்பானவற்றை பரப்புதலுக்கான குற்றவியல் சட்டம் 67 ஆகிய பிரிவுகளின்
கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 5 லட்ச ரூபாய்
வரை அபராதம் விதிக்கப்படும். மும்பை
காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், அவர்கள் அந்த கருத்துப் படத்தை
சமூக வலைதளத்திலிருந்து நீக்கியும் விட்டார்கள். இந்த
ஆட்சியில் பொது மக்கள் எப்படி எப்படியெல்லாம் குற்றவாளியாக்கப் படுவார்கள் என்றே புரிந்து
கொள்ள முடியாமல் விழிக்கின்றனர் மக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.