கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கைக்கு நாம்தமிழர் கட்சி சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் கடந்த ஒரு கிழமைக்கும் மேலாக தீவிரமுடன் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் வன்முறையாகவும் பல இடங்களில் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். வன்முறை நிகழ்வுகளில பலர் பலியாகினர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவியர் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அடையாறு சாஸ்திரி நகர் காவலர்கள் கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். எனினும், சில மாணவிகள் அந்த இடத்தில் இருந்து நகராமல் இருந்தனர். இதனால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களை விடுவித்து விட்டதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது கீச்சுப் பக்கத்தில், கொலை செய்தவர்களையும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட கொடுங்கோலர்களையும் விட்டுவிட்டு கோலமிட்டவர்களைக் கைது செய்துள்ளது அரசு! அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம்! என பகடியாடி கண்டனம் தெரிவித்துள்ளார். இக்கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,381.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.