நேற்று டெல்லியியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர். 10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியை அடைந்த, இந்தியாவுடன் பயணம் என்கிற முன்னெப்பில் பங்கேற்று தமிழில் முழங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கமல் ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், அவரைத் தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்டார் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி. இதையடுத்து, கமல்ஹாசன் தமிழில் பேச, கரூர் தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்தியவுடன் நடைப்பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் மேடையில் உரையாற்றிய அவர், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னார் எனத் தெரிவித்தார். இந்தியக் குடிமகனாக ராகுலின் இந்தியாவோடான பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தியின் இந்த முன்னெடுப்பில் பங்கேற்பது எனது அரசியல் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பலர் கூறினார்கள். ஆனால் எனது மனசாட்சியை கேட்டு முன்னெடுப்பில் பங்கேற்பது என முடிவு செய்தேன் என கமல் உரையாற்றியுள்ளார். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி 108 நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியாவோடான பயணத்தைத் தொடங்கினார். இந்த நடைபயணம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்தப் பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த முன்னெடுப்பில் கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர். அப்போது ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய கமல்ஹாசன், 'நான் ஏன் இங்கு வந்தேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். எனக்கு பல சித்தாந்தங்கள் இருந்தன. நான் ஒரு நடிகனாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும், இங்கு ஒரு இந்தியக் குடிமகனாகவே வந்துள்ளேன்' என்று தெரிவித்தார். கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோதே ராகுல் காந்தி, கமலை தமிழில் பேசுமாறு கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தமிழில் பேச, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொல்கிறார். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்காக மட்டும் அவரை என் உடன்பிறப்பாக நினைக்கவில்லை. இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் பயணம். அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் நான் தெருவில் வந்து நிற்பேன். நான் அதற்காகவே இந்த பயணத்தில் பங்கு கொண்டுள்ளேன் என்;றார் கமல். இந்தப் பயணத்தின் நோக்கம் இந்தியா சிக்கிவிட்ட நெருக்கடிக்கு எதிரானது என்பதாக கமல் அடையாளப்படுத்தியது கூட்டத்தினரிடையே குதுகலத்தை ஏற்படுத்தியது. நான் இங்கு வருவதற்கு முன்னதாக பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். நீங்கள் ராகுல் காந்தியின் முன்னெடுப்புக்குச் சென்றால் உங்களது அரசியல் பயணம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனது அரசியல் பயணம் எனக்காக உருவானது இல்லை. நாட்டுக்காக உருவானது. நாடு என்று வரும்போது இங்குள்ள பல்வேறு கட்சிகளின் கட்சி கொடிகளின் நிறங்கள் தாண்டி, நமக்கு நாட்டுக் கொடியில் உள்ள மூன்று நிறங்களே தெரிய வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நான் ராகுல் காந்தி பயணம் தொடங்கிய இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் தமிழன்தான். இந்தப் பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் இது பல தூரம் செல்ல வேண்டி உள்ளது. நான் கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை. மாறாக இந்த நடை பயணம் நமது பாரம்பரியமிக்க வரலாற்றிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது அதையும் தாண்டி அடுத்து வர இருக்கும் தலைமுறைகளுக்கானது. ராகுல் காந்தியை நான் மிகவும் மதிக்கிறேன். அவரின் துணிச்சலான இந்த முடிவையும், மாநிலங்கள் தாண்டிய இந்த நடை பயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். அதற்கு வாழ்த்து கூறுகிறேன் என்று தெரிவித்தார் கமல்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,473.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.