கோவையில் செவ்வாய்க்கிழமை
கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் சி.எஸ்.கர்ணன் அகவை62, கடலூர் மாவட்டத்தைச்
சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். 2009-ஆம் ஆண்டில் அப்போதைய உச்ச அறங்கூற்றுமன்றத்
தலைமை அறங்கூற்றுவர் ஏ.கே.கங்குலியால் சென்னை உயர் அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக நியமிக்கப்பட்ட
இவருடன் 2011-ஆம் ஆண்டு முதலே சக அறங்கூற்றுவர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்ததாக
குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தான் ஒரு தலித் என்பதால் சக அறங்கூற்றுவர்கள்
தன்னை மோசமாக நடத்துவதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு இவர் புகார் அனுப்பினார். தொடர்ந்து 2014-ஆம் ஆண்டில் உரிமையியல் அறங்கூற்றுவர்கள்
தேர்வு தொடர்பாக ஒரு பொது நல மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கர்ணன்,
நீதிமன்றத் தேர்வு குறித்து குற்றஞ்சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதையடுத்து, உயர் அறங்கூற்று மன்றத்தின் 20 அறங்கூற்றுவர்கள்
சேர்ந்து கர்ணனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதினர்.
இதன் பிறகு மீண்டும் 2015-ஆம் ஆண்டில், தான் தலித் என்பதால் தலைமை அறங்கூற்றுவர் கெயில்
தன்னை அவமானப்படுத்துவதாகவும், தலையாயதல்லாத வழக்குகளையே தன்னை விசாரிக்க வைப்பதாகவும்
புகார் தெரிவித்த இவர், தலைமை அறங்கூற்றுவர் மீது தானே அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு
தொடுத்து விசாரித்தார். இதையடுத்து, தான் நீண்ட விடுமுறையில் செல்வதாகத்
தலைமை அறங்கூற்றுவருக்கு கடிதம் எழுதினார். பின்னர், 2016 பிப்ரவரியில் கர்ணன் கொல்கத்தா
உயர் அறங்கூற்று மன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால், இந்த இடமாற்ற உத்தரவுக்கு தாமாகவே
இடைக்காலத் தடை விதித்துக் கொண்ட கர்ணன், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப்
பேட்டி அளித்தார். கர்ணன் விதித்த இடைக்காலத் தடையை உச்ச அறங்கூற்று
மன்ற கர்ணனுக்கு எதிரான 2நடுவர்கள் நீக்கியதை அடுத்து, தடையை நீக்கிய 2 அறங்கூற்றுவர்களையும்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி சென்னை மாநகர காவல் துறைக்கு
உத்தரவிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, அவருக்கு அறங்கூற்று மன்றப் பணிகள்
எதுவும் வழங்க வேண்டாம் என்று உச்ச அறங்கூற்று மன்ற கர்ணன் எதிரணி நெருக்குதல் தந்த
நிலையில், தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர் கொல்கத்தாவுக்கு பணியிட
மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த சனவரி மாதம் பிரதமருக்கு
ஒரு கடிதம் எழுதிய கர்ணன், அதில் உயர் அறங்கூற்று மன்றங்களில் பணியாற்றும் அறங்கூற்றுவர்கள்,
ஓய்வுபெற்றவர்கள் உள்ளிட்ட 20 பேர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார்.
இதை அறங்கூற்று மன்ற அவமதிப்பாகக் தெரிவித்து உச்ச அறங்கூற்று மன்ற கர்ணன் எதிரணி பிப்ரவரி
13-ஆம் தேதி அவரை நேரில் அணியமாக உத்தரவிட்டது. ஆனால் தன் மீது நாடாளுமன்றம் மட்டுமே
நடவடிக்கை எடுக்க முடியும் என்று உச்ச அறங்கூற்று மன்றத்துக்கு கர்ணன் கடிதம் எழுதினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் அவருக்கு எதிராகப்
பிணையில் வரக்கூடிய அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக உச்ச அறங்கூற்று
மன்றத்தின் 7 அறங்கூற்றுவர்களும் ஏப்ரல் 28-ஆம் தேதி அணியமாக வேண்டும் என்று கடந்த
ஏப்ரல் 13-ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனால், பரிசோதனை நடவடிக்கையை மறுத்த அவர், 7 அறங்கூற்றுவர்களையும்
கைது செய்ய ஆணை பிறப்பித்தார். பின்னர் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மீண்டும் பரபரப்பை
ஏற்படுத்தினார். இதையடுத்து, இந்திய அறங்கூற்றுத்துறை வரலாற்றில்
முதல் முறையாக உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர் ஒருவருக்கு 6 மாத சிறைத் தண்டனை
விதித்து உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள் அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில்தான்
அவர் கோவையில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கர்ணன் உயர் அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவராகப்
பொறுப்பேற்றதிலிருந்தே அறங்கூற்றுத் துறையில் பின்பற்ற பட்டு வந்த நடவடிக்கைகளை அவரால்
செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை என்பதும், ஆளும் அரசோ ஊடகங்களோ அவர் முறையீட்டுக்கு
செவிமடுக்கவேயில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.