Show all

ஸ்டாலின், மம்தா, ராகுல் புடைசூழ கேமந்த்சோரன் பதவியேற்றார்! ஜார்கண்ட் மாநில முதல்வராக

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் கேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

14,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் கேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜார்கண்டில் சட்டமன்றப் பொது தேர்தல் 5கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. 
இந்தத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30, காங்கிரஸ் 16, இராஷ்ட்ரீய ஜனதா தளம் 1 என்று 47 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இதையடுத்து, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் கேமந்த் சோரன், ஜார்கண்டின் 11வது முதல்வராக இன்று பகல் 2 மணியளவில் பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் திரவுபதி முர்மு பதவியுறுதி செய்து வைத்தார்.

இராஞ்சியில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி பாராளுமன்ற உறுப்பினர், டி.ஆர்.பாலு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், ஆம்ஆத்மி சஞ்சய்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சராக கேமந்த் சோரன் பதவியேற்றவுடன், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரான், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சத்யானந்த் போக்டா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,381.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.